பாலியல் வழக்கு.. முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி: சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!!
பெங்களூரு: பாலியல் வழக்கில் முன்னாள் பிரதமர் தேவகவுடா பேரன் பிரஜ்வல் ரேவண்ணா குற்றவாளி என சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கர்நாடக முன்னாள் முதல்வர் தேவகவுடாவின் பேரனான பிரஜ்வல் ரேவண்ணா (33) பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடியோக்கள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகின. இதைத் தொடர்ந்து அவரது வீட்டு பணிப்பெண், மஜத கிராம பஞ்சாயத்து தலைவி உட்பட 5 பெண்கள் அவருக்கு எதிராக புகார் அளித்தனர். அதன்பேரில் பிரஜ்வல் ரேவண்ணா மீது 5 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த புகார் தொடர்பாக கர்நாடகா போலீசார் விசாரணை நடத்திய நிலையில் பிரஜ்வல் ரேவண்ணா நாட்டை விட்டு தப்பி ஜெர்மனுக்கு ஓடிவிட்டார். பின்னர் ஜெர்மனியில் இருந்து திரும்பிய பிரஜ்வல் ரேவண்ணா, கைது செய்யப்பட்டார். பாலியல் வழக்கை அடுத்து மஜத கட்சியில் இருந்து பிரஜ்வல் ரேவண்ணா இடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து ரேவண்ணா மீதான பாலியல் பலாத்கார வழக்கை எம்பி, எம்.எல்.ஏ.க்களை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் விசாரித்தது. வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில் கடந்த 14 மாதங்களாக அவர் சிறையில் உள்ளார்.
இந்நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா வழக்கில் 26 சாட்சிகளை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பை அறிவித்தது. அதன்படி, பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வால் ரேவண்ணா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குற்றவாளி என தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது பிரஜ்வால் கண்ணீர் விட்டார். அவர் அழுது கொண்டே நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்ததாகத் தெரிகிறது. குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட பிரஜ்வாலுக்கான தண்டனை நாளை அறிவிக்கப்படும். இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட 14 மாதங்களுக்குள் தீர்ப்பு வந்துள்ளது, விசாரணையும் விரைவாக முடிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.