ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்திவைப்பு: டிரம்ப்பிடம் சரணாகதி அடைந்தது ஒன்றிய அரசு
அதே சமயம் பாகிஸ்தானுக்கு பல்வேறு சலுகைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. இது அமெரிக்கா மற்றும் இந்தியா உறவில் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு காரணம் உக்ரைன் போரை நிறுத்த மறுக்கும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தான் என்று தெரிய வந்துள்ளது. உக்ரைன் போரை நிறுத்தும்படி பலமுறை அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் புடினுக்கு எச்சரிக்கை விடுத்துவிட்டார். ஆனால் ரஷ்யா அடிபணியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் சார்பில் எத்தனை பொருளாதார தடை விதித்தாலும், அதை ஈடுகட்டும் அளவுக்கு ரஷ்யாவிடம் இருந்து இந்தியாவும், சீனாவும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால், இத்தனை நாட்கள் போர் நடந்தும் ரஷ்யாவின் பொருளாதாரம் பாதிக்கப்படவில்லை.
எனவே டிரம்ப்பின் கோபம் இப்போது நேரடியாக இந்தியா மீது திரும்பி உள்ளது. இந்தியாவை பலவீனப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு அதிக வரி, பாகிஸ்தானுக்கு வரிச்சலுகைகளை அறிவித்து வருகிறார். இந்த சூழலில் அமெரிக்காவின் வரிவிதிப்பை முன்கூட்டியே தெரிந்து கொண்ட இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை கடந்த ஒரு வாரமாக நிறுத்தி வைத்துள்ளதாக ராய்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது. இந்தியா, ரஷ்யா இடையிலான எண்ணெய் வர்த்தகம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (ஐஓசி), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (எச்பிசிஎல்), பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்) மற்றும் மங்களூர் ரிபைனரி பெட்ரோகெமிக்கல் லிமிடெட் (எம்ஆர்பிஎல்) போன்ற இந்தியாவின் அரசுக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மூலம் நடந்து வருகிறது.
இந்த நிறுவனங்கள் கடந்த ஒரு வாரமாக ரஷ்ய கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிறுவனங்கள் வழக்கமாக ரஷ்ய கச்சா எண்ணெய்யை டெலிவரி அடிப்படையில் வாங்கி வருகின்றன. தற்போது டிரம்ப் விடுத்த வரி எச்சரிக்கை காரணமாக இந்திய நிறுவனங்களின் ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ளது. ட்ரூத் சோஷியலில் டிரம்ப் வெளியிட்ட பதிவில், ரஷ்யாவுடனான எண்ணெய் மற்றும் ஆயுத வர்த்தகத்திற்காக இந்தியா கூடுதல் அபராதத்தை எதிர்கொள்ளும் என்றும் கூறப்பட்டது. இந்த அபராதத்தின் அளவு இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது இந்திய ஏற்றுமதி பொருட்களுக்குமட்டும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. எனவே கூடுதல் அபராதம் விதிக்கும் முன்பே ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா நிறுத்தி வைத்துள்ளது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் மிரட்டலுக்கு ஒன்றிய அரசு சரணாகதி அடைந்து விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
* ரஷ்யாவிடம் இருந்து நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெய் வாங்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா முதலிடத்தில் உள்ளது.
* 2022 டிசம்பர் 5ஆம் தேதி முதல் 2025 மே மாதம் வரை, ரஷ்யாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் சீனா 47 விழுக்காட்டையும், இந்தியா 38 விழுக்காட்டையும் வாங்கின.
* உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் இறக்குமதியாளரான இந்தியா, ரஷ்யாவிலிருந்து கடல் வழியாக இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெயை அதிகம் வாங்கும் நாடாகும்.
* பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு
ரஷ்ய கச்சா எண்ணெய்யை இந்தியா மலிவு விலையில், அதாவது பேரல் 60 டாலர் அளவுக்கு வாங்கினாலும் உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை. தற்போது ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவது நிறுத்தப்பட்டால், சர்வதேச மார்க்கெட் அடிப்படையில் பேரல் 130 டாலர் முதல் 140 டாலர் வரை விலை கொடுத்து இந்தியா வாங்க வேண்டியது வரும். அதாவது இரண்டு மடங்கு அளவுக்கு விலை கொடுக்க வேண்டியது வரும். இதனால் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர வாய்ப்பு உள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர். இதை ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி உறுதிப்படுத்தினார். அவர் கூறுகையில்,’ உலக சந்தைகளில் இருந்து ரஷ்ய கச்சா எண்ணெயை வாங்குவதை நிறுத்தினால் இந்தியா ஒரு பேரல் 130-140 டாலர் வரை விலை கொடுக்க வேண்டியது வரும். இது பல்வேறு பாதிப்புகளை உருவாக்கும். எனவே இந்தியா தனது எண்ணெய் தேவைகளைப் பூர்த்தி செய்ய மற்ற சப்ளையர்களை நாட வேண்டிய நிலை ஏற்படும்’ என்றார்.
* ஒன்றிய அரசு மறுப்பு
ரஷ்ய கச்சா எண்ணெயை நிறுத்துமாறு இந்தியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு ஒன்றிய அரசு அறிவுறுத்தியதாக வெளியான தகவலை ஒன்றிய அரசு மறுத்துள்ளது. எண்ணெய் கொள்முதல் தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று ஒன்றிய அரசின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
* எண்ணெய் நிறுவனங்கள் பதிலளிக்க மறுப்பு
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது கடந்த ஒருவாரமாக நிறுத்தப்பட்டுள்ளது பற்றி இந்திய எண்ணெய் நிறுவனங்களான ஐஓசி, பிபிசிஎல், ஹெச்பிசிஎல், எம்ஆர்பிஎல் மற்றும் ஒன்றிய எண்ணெய் அமைச்சகம் ஆகியவற்றின் கருத்துக்களை ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கேட்டு இருந்தது. இதற்கு அனைத்து தரப்பினரும் பதில் அளிக்க மறுத்துவிட்டனர்.
* கச்சா எண்ணெய் விலையை உயர்த்தும் தந்திரமா?
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றதும் அமெரிக்காவிடம் இருந்து இறக்குமதி செய்யும் கச்சா எண்ணெய் அளவை இந்தியா அதிகரித்தது. தற்போது வரி விதிப்பின் மூலம் ரஷ்யா கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முற்றிலும் நிறுத்தி அமெரிக்காவின் கச்சா எண்ணெய்யை உலக சப்ளையரில் நம்பர் 1 இடத்தை நோக்கி முன்னோக்கி கொண்டு செல்லும் தந்திரமாக இந்த நடவடிக்கை இருக்கலாம் என்றும் இதன் மூலம் கச்சா எண்ணெய் விலையை பேரல் 140 டாலர் வரை உயர்த்த அமெரிக்கா திட்டமிட்டு வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
* தனியாருக்கு தடை இல்லை
ஒன்றிய அரசின் எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வாங்கவில்லை என்றாலும் தனியார் எண்ணெய் நிறுவனங்களான ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் நயாரா எனர்ஜி ஆகியவை தொடர்ந்து தடை இல்லாமல் எண்ணெய் வாங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
* ரஷ்ய கச்சா எண்ணெய் வாங்குவதற்கு இந்தியா மீது 500% வரியா?
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது 500 விழுக்காடு வரி விதிப்பது குறித்து அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாக விவாதம் நீடிக்கிறது. 84 எம்.பி.களின் ஆதரவு பெற்ற இந்த மசோதா தற்போது அமெரிக்க செனட் அவையின் பரிசீலனையில் உள்ளது.