600 ஆண்டுகளுக்குப் பிறகு வெடித்த ரஷ்யாவின் க்ராஷென்னினிகோவ் எரிமலை: மனித வசிப்பிடங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை
மாஸ்கோ: ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை 600 ஆண்டுகளுக்கும் பிறகு வெடித்துள்ளது. ரஷ்யாவில் கடந்த வாரம் 7 ரிக்டர் அளவுகோளில் பதிவான பயங்கர நிலநடுக்கத்தால் இந்த எரிமலை வெடிப்பு தூண்டப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
கம்சட்காவில் உள்ள க்ராஷென்னினிகோவ் எரிமலை 6 கிலோமீட்டர் (3.7 மைல்) உயரத்திற்கு சாம்பல் படலத்தை வீசியதாக கூறப்படுகிறது. இந்த எரிமலை மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து தொலைவில் உள்ளதாலும், சாம்பல் மேகம் பசிபிக் கடலுக்கு நோக்கி நகர்ந்து வருவதால், மனித வசிப்பிடங்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று ரஷ்யாவின் அவசர அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த எரிமலை வெடிப்பை தொடர்ந்து சுற்றியுள்ள பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த எரிமலை வெடிப்பிற்கு Orange aviation alert அளிக்கப்பட்டுள்ளது. இது விமான போக்குவரத்திற்கான அபாய அளவைக் குறிக்கிறது.