பிரதமர் வந்தாலும், சகாக்கள் வந்தாலும் திராவிட மண்ணில் காவிகள் காலூன்ற முடியாது: அமைச்சர் எ.வ.வேலு திட்டவட்டம்
பெரம்பூர்: சென்னை கொளத்தூர் ரெட்டேரி சாலை சந்திப்பு அருகில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், மேம்படுத்தப்பட்டு வரும் கொளத்தூர் ஏரிக்கரையின் முன்னேற்ற பணிகளை அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தனர். அப்போது வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் தலைமை செயலாளர் காகர்லா உஷா உள்பட பலர் இருந்தனர். முன்னதாக, நிருபர்களிடம் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது; இந்த ஏரியை 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கொளத்தூர் செந்தில் நகரில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணிகள் தொடங்கிவிட்டது.
139 கோடி ரூபாய் செலவில் பாடி ரயில்வே மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது. 70 சதவீதம் பணிகள் நடைபெற்றுள்ளது. இந்த ஏரியில் நீர் மேலாண்மை துறையையொட்டி ஒட்டி நடைபாதை வருகிறது. கொளத்தூர் தொகுதியில் பிறக்க முடியவில்லையே என்று திருவண்ணாமலை வாக்காளர்கள் வருத்தப்படுகிறார்கள். முதலமைச்சருக்கு ஆயிரம் பணிகள் இருந்தாலும் மாதந்ேதாறும் தனது தொகுதிக்கு வருகிறார். அதை பார்த்து நாங்களும் எத்தனை பணிகள் இருந்தாலும் தொகுதிக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் வருகிறது. யார் ஆளுங்கட்சியாக இருந்தாலும் மக்கள் கோரிக்கை நிறைவேற்றுவதைதான் பார்க்க வேண்டும்.
அந்த ஆட்சியை விட இந்த ஆட்சி மக்களுடைய திட்டங்களை நிறைவேற்றுவதில் மும்முரமாக உள்ளது. உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை அற்புதமான திட்டம் என்று தமிழ்நாடு வரவேற்கிறது. தங்கள் அடையாளத்தை காட்டிக்கொள்வதற்காக மக்கள் மறந்துவிடக்கூடாது வெளியே வந்து ரொம்பநாள் ஆகிவிட்டதால் சுற்றுப்பயணத்தை தொடங்கியிருக்கிறார் எதிர்க்கட்சி தலைவர். நாடாளுமன்ற தேர்தலுக்கு பிரதமர் வந்தார். சட்டமன்ற தேர்தல் வரப்போகிறது. அதற்காக வருவார். இந்த மண் திராவிட மண், பெரியார், அண்ணா, கலைஞர் என மும்மூர்த்திகள் பண்பட்டு உள்ள மண். எந்த காலத்திலும் பிரதமர் வந்தாலும் அவரின் சகாக்கள் வந்தாலும் திராவிட மண்ணில் காவிகள் காலூன்ற முடியாது.