ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய திமுகவின் மண்டல பொறுப்பாளர்களுக்கு முதல்வர் அழைப்பு
சென்னை: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய திமுகவின் மண்டல பொறுப்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். நம் மண் மொழி மானம் காக்க, “ஓரணியில் தமிழ்நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. இதை திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் கடந்த 1ம் தேதி தொடங்கி வைத்தார். ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நேரடி கட்டுப்பாட்டில் கண்காணித்து வருகிறார்.
இதுகுறித்து, அடிக்கடி மாவட்ட செயலாளர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார். வெளிமாவட்டங்களுக்கு செல்லும் போதும் கூட மக்களை சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையிலும் ஈடுபட்டு வருகிறார். அப்போது அரசின் நலத்திட்டங்கள் முறையாக வந்து சேர்கிறதா என பொதுமக்களிடம் அவர் கேட்டறிந்து வருகிறார். மேலும் ‘‘ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தில் ஒன்றிணையுமாறு பொதுமக்களுக்கு அவர் அழைப்பு விடுத்து வருகிறார்.
திமுகவினரின் ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் இதுவரை 2 கோடி உறுப்பினர்கள் திமுகவில்
இணைந்துள்ளனர். இந்நிலையில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை நிலவரம் குறித்து ஆய்வு செய்ய திமுகவின் மண்டல பொறுப்பாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுகவின் மண்டல பொறுப்பாளர்கள் அப்பல்லோ மருத்துவமனைக்கு வர முதல்வர் அழைப்பு விடுத்துள்ளார். தேர்தல் களப்பணிகள் குறித்தும் திமுக மண்டல பொறுப்பாளர்களிடம் கேட்டறிய உள்ளார்.