முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நலம் விசாரிப்பதற்காக மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
சென்னையில் வாக்கிங் சென்ற போது முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் இன்று சந்தித்து பேசினர். திமுக தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் தேறினார். தற்போது அவர் அரசு பணி, கட்சி பணிகளை பார்க்க தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வழக்கமாக செல்லும் சென்னை அடையாறு தியோசோபிகல் சொசைட்டி பார்க்கில் வாக்கிங் சென்றார். அந்த பார்க்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் வாக்கிங் வந்துள்ளார். வாக்கிங்கின் போது ஒருவரை ஒருவர் நேர் எதிரே சந்தித்து கொண்டனர். அப்போது முதல்வர் மு.க.ஸ்டாலின், ஓபிஎஸ் ஆகியோர் ஒருவரை ஒருவர் பார்த்து கைக்குலுக்கி கொண்டனர்.
மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓபிஎஸ் உடல் நலம் குறித்து கேட்டறிந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திடீரென ஒரே இடத்தில் சந்தித்தது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் இன்று இரண்டாவது முறையாக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள இல்லத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார்.
பின்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது: முதலமைச்சர் உடனான சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை. மு.க.முத்து மறைவுக்கும் முதலமைச்சரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தேன். முதலமைச்சர் மருத்துவமனயில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறார். முதலமைச்சரை நலம் விசாரிப்பதற்காக மரியாதை நிமித்தமாக சந்தித்தேன்.
திமுகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரியும் இல்லை என ஓ.பன்னீர்செல்வம் பதில் அளித்துள்ளார். மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்வி நிதியை விடுவிக்காமல் இருப்பதை ஏற்க முடியாது. மக்களை பாதிக்கும் எந்த திட்டங்களாக இருந்தாலும் நான் கண்டன அறிக்கை வெளியிடுவேன். விஜயுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு இதுவரை அவர்களும் பேசவில்லை, நாங்களும் பேசவில்லை என ஓபிஎஸ் பதில் அளித்தார். அரசியலில் எனக்கென்று சுயமரியாதை உள்ளது என்று கூறியுள்ளார்.