நிமிஷா பிரியாவின் மரண தண்டணை ரத்தா?.. ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்
சனா: ஏமன் நாட்டைச் சேர்ந்தவர் கொல்லப்பட்ட வழக்கில் கேரளாவை சேர்ந்த செவிலியர் நிமிஷா பிரியாவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து என வெளியான தகவலை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. தொழில் பங்குதாரரை கொன்றதாக கேரள நர்ஸ் நிமிஷா ப்ரியாவுக்கு ஏமனின் சனா நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. அதன்படி நிமிஷா ப்ரியாவுக்கு கடந்த 16ம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட இருந்தது. நிமிஷா ப்ரியாவை காப்பாற்ற கோரி உச்ச நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய் யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இந்தியாவின் கிரான்ட் முப்தி என அழைக்கப்படும் கேரள மாநிலம் காந்தரபுரம் ஷேக் அபுபக்கர் முஸ்லியார் என்பவர் ஏமனில் உள்ள மதத்தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, கடைசி நிமிடத்தில் நிமிஷா ப்ரியாவின் மரண தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் நிமிஷா ப்ரியா விவகாரம் தொடர்பாக ஏமனில் உள்ள அதிகாரிகளுடன் இந்தியா தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஒன்றிய அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஏமன் அரசு ரத்து செய்தது. மரண தண்டனையை ஏமன் முழுமையாக ரத்து செய்ததாக இந்தியாவின் கிராண்ட் முஃப்தி காந்தபுரம் ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அபூபக்கர் முஸ்லியார் கூறியதாவது: முன்னர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது. சனாவில் நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், முன்னர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மரண தண்டனையை முற்றிலுமாக ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் செவிலியர் நிமிஷா பிரியாவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து என வெளியான தகவலை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக வெளியான தகவலை ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.