ரூ.450 கோடியில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
தூத்துக்குடி: ரூ.450 கோடியில் கட்டப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தின் புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். 17,340 சதுர மீட்டரில் நவீன தொழில்நுட்பத்தில் விமான நிலையத்தின் புதிய முனையம் கட்டப்பட்டுள்ளது. தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையம் ஆண்டுக்கு 20 லட்சம் பயணிகளை கையாளும் திறன் உடையது. 3,115 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம், இரவில் விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலைய புதிய முனையத்தில் 5 விருந்தினர் அறைகள், ஒரு பெரிய உணவகம் உள்ளன
புதிய முனையத்தில் சிற்றுண்டி கடைகள், மருந்தகம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. துறைமுகத்தில் 3வது சரக்கு தளவாட முனையத்தையும் பிரதமர் திறந்து வைத்தார். ரூ.2,571 கோடியில் முடிவுற்ற தேசிய நெடுஞ்சாலைப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 50 கி.மீ. நீளத்துக்கு சேத்தியாதோப்பு -சோழபுரம் 4 வழிச்சாலையை நாட்டுக்கு அர்ப்பணித்தார். ரூ.200 கோடியில் தூத்துக்குடி துறைமுக சாலையின் 6 வழிப்பாதையையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார். தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.285 கோடியில் வடக்கு சரக்கு தளவாட நிலையம் திறந்து வைத்தார்.
69 லட்சம் டன் சரக்குகளை கையாளும் திறனில் வடக்கு சரக்கு தளவாட நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ரூ.1,030 கோடியில் ரயில்வே துறையில் நிறைவேற்றப்பட்டுள்ள பணிகளை பிரதமர் தொடங்கி வைத்தார். மதுரை -போடி நாயக்கனூரில் 90 கி.மீ. மின்மயமாக்கல் செய்யப்பட்ட ரயில் பாதையை பிரதமர் திறந்து வைத்தார்.