அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த சீராய்வுக் கூட்டம்
இக்கூட்டத்தில் இந்து சமய அறநிலையத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும், 2021 - 2022 ஆம் நிதியாண்டு முதல் 2025 - 2026 நிதியாண்டு வரையிலான சட்டமன்ற அறிவிப்புகளில் நிறைவேற்றப்பட்ட அறிவிப்புகளை தவிர இதர அறிவிப்புகளின் தற்போதைய நிலை குறித்தும், குறிப்பாக ஒருங்கிணைந்த பெருந்திட்ட வரைவின் (Master Plan) கீழ் நடைபெற்று வரும் திருப்பணிகள், 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொன்மையான திருக்கோயில் திருப்பணிகள், கிராமப்புற மற்றும் ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிகள், பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்தி வழங்கிடும் வகையில் நடைபெற்று வரும் பணிகள் ஆகியவற்றின் முன்னேற்றம் குறித்தும், திருக்கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணிகள் மற்றும் நில அளவை பணிகள் குறித்தும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் விரிவாக ஆய்வு மேற்கொண்டார்.
மேலும், புதிய திருத்தேர்கள் உருவாக்கும் பணிகள், மராமத்து பணிகள் மற்றும் திருத்தேர் கொட்டகைகள் அமைக்கும் பணிகள், திருக்குளங்களை சீரமைக்கும் பணிகள், உலோகத் திருமேனி பாதுகாப்பு அறை கட்டுமானம், பசுமடங்களை மேம்படுத்துதல், மலைத் திருக்கோயில்களுக்கு கம்பிவட ஊர்தி மற்றும் மின்தூக்கி அமைத்தல் போன்ற பணிகளின் முன்னேற்றம் குறித்தும், திருக்கோயில் யானைகள் பராமரிப்பு, மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணங்களின் செயல்திட்டம், திருக்கோயில்களில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ மையங்களின் செயல்பாடுகள், திருக்கோயில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களின் நலன் சார்ந்த திட்டங்கள், திருக்கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம் மற்றும் பிரசாதத்தின் தரத்தினை உறுதி செய்திட அமைக்கப்பட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்களின் பணி முன்னேற்றம், திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆகியவை குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நிறைவாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு பொறுப்பேற்றபின், இந்து சமய அறநிலையத்துறையில் பல்வேறு முனைப்பான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அனைத்து தரப்பினரிடத்திலும் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பல்வேறு திட்டங்களுக்கு அதிகளவில் அரசு மானியங்களை முதலமைச்சர் வழங்கியிருகின்றார்கள். ஆகவே, துறை அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் அறிவிக்கப்பட்ட திருப்பணிகள் அனைத்தையும் குறித்த காலத்தில் நிறைவேற்றிடும் வகையில் களஆய்வு மேற்கொண்டு விரைந்து பணியாற்றிட வேண்டுமென அறிவுரைகளை வழங்கினார்.
முன்னதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் காஞ்சிபுரம், அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோயிலில் பணிபுரிந்து பணிகாலத்தில் உயிரிழந்த பணியாளரின் வாரிசுதாரர் திருமதி கே.நிர்மலா அவர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மருத்துவர் க.மணிவாசன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், கூடுதல் ஆணையர்கள் டாக்டர் சி.பழனி, ந.திருமகள், சி.ஹரிப்ரியா, மா.கவிதா, பொ.ஜெயராமன், கொ.சே.மங்கையர்க்கரசி, தலைமைப் பொறியாளர் பொ.பெரியசாமி, மாவட்ட வருவாய் அலுவலர்கள், இணை ஆணையர்கள், துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.