எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவப்படிப்புகளுக்கான சிறப்புப்பிரிவு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியது..!!
சென்னை : எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடங்கியுள்ளது . தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். பி.டி.எஸ் படிப்புகளுக்கு 72,743 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், கடந்த 25-ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான தரவரிசை பட்டியலில் 39,853 பேர் இடம்பெற்றுள்ளனர். 7.5% உள் இடஒதுக்கீட்டு தரவரிசைப் பட்டியலில் 4,062 பேரும், நிர்வாக ஒதுக்கீட்டு தரவரிசை பட்டியலில் 28,279 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு இன்று (ஜூலை 30) நேரடியாக நடைபெற்று வருகிறது. 7.5% உள் இடஒதுக்கீட்டின் கீழ் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த கலந்தாய்வு காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறவுள்ளது.
முதலில் விளையாட்டு வீரர்களுக்கும், பின்னர் முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுதாராருக்கு கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணிக்கு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு கலந்தாய்வு நடைபெற உள்ளது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப்படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு காலை 10 மணிக்கு தொடங்குகிறது. ஆகஸ்ட் 4 மாலை 5 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்து, கட்டணம் செலுத்தி, கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யலாம். மாணவர் சேர்க்கை ஒதுக்கீடு விவரங்கள் ஆகஸ்ட் 6-ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.