'எந்த ஒரு தலைவரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் எனக் கூறவில்லை' - மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தில் பிரதமர் பேச்சு
அவர் ஆற்றிய உரையில்; "தீவிரவாதிகளின் அடித்தளத்தை தகர்த்த வெற்றிநாள் தான் சிந்தூர் நடவடிக்கை. வகுப்புவாத விதையை தூவும் நோக்கத்திலேயே பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மத அடிப்படையிலேயே பஹல்காமில் அப்பாவி மக்களை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
இந்தியாவுக்கும் இந்திய நாட்டு மக்களுக்கும் எதிரான சதிச்செயல்தான் பஹல்காம் தாக்குதல். இந்திய நாட்டின் ராணுவத்துக்கு உறுதுணையாக நாட்டு மக்கள் அனைவரும் நின்றனர். இந்திய படைகள் தாக்குதல் நடத்திய வெற்றி விழாவை நாடே கொண்டாடியது.
தீவிரவாதத்தை குழிதோண்டி புதைப்பதற்கு உறுதி பூண்டுள்ளது இந்தியா. தீவிரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக் கட்டுவோம். தீவிரவாதிகள் மீதான தாக்குதலை நடத்துவதற்கு ராணுவத்துக்கு முழு சுதந்திரமும் வழங்கப்பட்டது.
பாகிஸ்தானில் மூலை முடுக்கெல்லாம் இருந்த தீவிரவாத முகாம்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. இப்படியான தாக்குதல் நடக்கும் என அவர்கள் கனவிலும் நினைத்திருக்கமாட்டார்கள். தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியதால் சண்டை நிறுத்தத்துக்கு முடிவு செய்தோம்.
எந்த ஒரு தலைவரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் எனக் கூறவில்லை. போரை தீவிரப்படுத்த விரும்பாததால் தாக்குதலை நாம் நிறுத்தினோம். ஏப்ரல் 22 பஹல்காம் தாக்குதலுக்கு 22 நிமிடங்களில் இந்தியா பழி தீர்த்தது. பாகிஸ்தானின் பெரும்பாலான விமானப்படைத்தளங்கள் இன்னும் ஐசியூவில் உள்ளன.
ராணுவத் தளவாடங்கள் உள் நாட்டிலேயே உற்பத்தியாகிறது. அவை உடனே ராணுவத்திற்குக் கிடைக்கின்றனர். பாதுகாப்புத்துறைக்கான உள்நாட்டு தயாரிப்புகள் என்பது வெறும் கோஷமல்ல. இதற்காக கொள்கையை மாற்றியுள்ளோம். தெளிவான கண்ணோட்டத்துடன் முன்னேறிக் கொண்டிருக்கிறோம்; காங் ஆட்சியில் இதற்கு முக்கியத்துவம் தரப்படவில்லை" என மக்களவையில்பிரதமர் மோடி பேசினார்.