தொடர் கனமழையால் மூணாறில் இருந்து தேனி செல்லும் சாலையில் மண் சரிவு; மாற்று வழியில் வாகனங்கள் இயக்கம்!
கேரளாவினுடைய மதியப்பகுதிகளான இந்த மாவட்டங்கள் மற்றும் வடக்கு பகுதியில் இருக்கக்கூடிய மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், தொடர் மழை காரணமாக மூணாறில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இடுக்கி மாவட்டம் மூணாறில் இருந்து தேனி செல்லக்கூடிய சாலையில் பொட்டானிக்கல் கார்டன் என்கிற இடத்தில் கனமழை காரணமாக மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கிய வாகன ஓட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நிலச்சரிவு ஏற்பட்ட சாலையை சீரமைக்கும் பணிகளில் நெடுஞ்சாலை துறையினரும், மாவட்ட நிர்வாகத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.
இன்று மாலைக்குள் இந்த பாதை சீரமைக்கப்படும் என கூறப்படுகிறது. தொடர்ந்து மலையோர பகுதிகளில் பெய்து வரக்கூடிய மழை காரணமாக , அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனால் அணைகளில் இருந்து அதிகளவில் உபரி நீர் திறக்கப்படுவதால் ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஜூலை 30ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது.