கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் 15 லட்சம் டன் குப்பை அகற்றம்: மாநகராட்சி தகவல்
சென்னை: கொடுங்கையூர் குப்பை கிடங்கில், கடந்த 8 மாதங்களில் பயோ மைனிங் முறையில் 15 லட்சம் டன் குப்பை, கழிவுகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் ஆண்டுதோறும் அதிகரிக்கும் மக்கள் தொகைக்கு ஏற்ப குடியிருப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் சென்னையில் உற்பத்தியாகும் குப்பை கழிவுகளின் அளவும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, சென்னை மாநகரை தூய்மையாக பராமரிக்கவும், திடக்கழிவு மேலாண்மையை முறையாக செயல்படுத்தவும் மாநகராட்சி நிர்வாகம் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், தீவிர தூய்மைப்பணி திட்டத்தில், சாலைகள், தெருக்கள், பொது இடங்கள், நீர்நிலை கரைகளில் நீண்ட காலமாக குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பை, கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
தற்போது சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பை, கழிவுகள் பெருங்குடி மற்றும் கொடுங்கையூர் குப்பை கிடங்குகளில் கொட்டப்படுகிறது. பல ஆண்டுகளாக இந்த கிடங்குகளில் கொட்டப்பட்டு, மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, பெருங்குடி குப்பை கிடங்கில், பயோமைனிங் முறையில் குப்பை கழிவுகளை தரம் பிரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பயோ மைனிங் முறையில் கொடுங்கயூர் கிடங்கிலும் குப்பையை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 2030ம் ஆண்டுக்குள் இந்த 2 பெரிய குப்பை கிடங்குகளில், குப்பை கொட்டுவதை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருகிறது. கொடுங்கையூர் குப்பை கிடங்கு 342.91 ஏக்கர் பரப்பளவு கொண்டது.
இதில், 252 ஏக்கர் பரப்பளவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது, திருவொற்றியூர், மணலி, மாதவரம், தண்டையார்பேட்டை, ராயபுரம், திரு.வி.க.நகர், அம்பத்தூர், அண்ணாநகர் ஆகிய மண்டலங்களில் சேகரிக்கப்படும் குப்பை இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால், 66.52 லட்சம் கன மீட்டர் அளவிலான குப்பை, மலை போல் குவிக்கப்பட்டுள்ளது. குப்பை கழிவுகளால், நிலத்தடி நீரில் ரசாயன தன்மை அதிகரித்து சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தியது. இதற்கு தீர்வு காணும் வகையில், அண்ணா பல்கலை, ஐஐடி வல்லுநர்கள் ஆலோசனைப்படி, கொடுங்கையூர் குப்பை கிடங்கை, ‘பயோ மைனிங்’ முறையில் அகழ்ந்தெடுத்து மீட்கும் பணிக்கு, 6 தொகுப்புகளாக மாநகராட்சி டெண்டர் அறிவித்தது. இதற்காக, ஒன்றிய அரசு நிதியாக 160 கோடி ரூபாய், மாநில அரசு 102 கோடி ரூபாய், சென்னை மாநகராட்சி 378 கோடி ரூபாய் என 648.83 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் வாயிலாக, 251.9 ஏக்கர் நிலம் மீட்கப்பட உள்ளது.
இந்த பயோ மைனிங் முறையில், கொடுங்கையூர் குப்பை கிடங்கில் இருந்து கடந்த 8 மாதங்களில் 15 லட்சம் டன் குப்பை அகற்றப்பட்டுள்ளது. இதில், எரியும் தன்மை உள்ள 1.4 லட்சம் குப்பை அகற்றப்பட்டுள்ளது. மீட்டெடுக்கப்படும் நிலத்தில் மரங்களை நட்டு, பசுமையான சூழலை உருக்கப்பட உள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘வடசென்னை மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று கொடுங்கையூர் குப்பை கிடங்கில் பயோ மைனிங் முறையில் குப்பை அகற்றப்பட்டு வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் மொத்த குப்பையும் அகற்றப்பட்டு, அங்கு பசுமை பூங்கா, குப்பை கையாள்வதற்கான வசதிகள் அமைக்கப்படும்,’ என்றார்.
தரம் பிரிக்க விழிப்புணர்வு
குப்பை, கழிவுகளை முறையாக தரம் பிரித்து பொதுமக்கள் வழங்காததால், அதை மொத்தமாக குவித்து, பிறகு தரம் பிரிப்பது சவாலாக உள்ளது. எனவே, வீடுகளில் இருந்து குப்பையை முறையாக தரம் பிரித்து வழங்குவது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும், குப்பையை கையாள்வதில் புதுமையான நடவடிக்கைகளை புகுத்துவதிலும் இதைச் செய்ய உள்ளனர்.