இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 2 பாக். தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: பாதுகாப்புப் படை அதிரடி
பூஞ்ச்: கடந்த சில நாட்களுக்கு முன்பு, ‘ஆபரேஷன் மகாதேவ்’ என்ற பெயரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில், பஹல்காம் தாக்குதலின் மூளையாகச் செயல்பட்ட ஹாஷிம் மூசா என்ற தீவிரவாதி சுட்டு வீழ்த்தப்பட்டான். பாகிஸ்தான் ராணுவத்தின் சிறப்பு சேவைக் குழுவில் பயிற்சி பெற்ற அவன், லஷ்கர்-இ-தொய்பா அமைப்பில் இணைந்து தீவிரவாதச் செயல்களை அரங்கேற்றி வந்தான். கடந்த 4 நாட்களாக கண்காணிக்கப்பட்டு வந்த அவனது குழு, தகவல் தொடர்பு கருவியை இயக்கியபோது அவர்களின் இருப்பிடம் துல்லியமாகக் கண்டறியப்பட்டது.
அதிகாலை முதல் ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு, மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதுடன், தப்ப முயன்ற மற்றொருவனும் சுட்டு வீழ்த்தப்பட்டான். இந்தச் சூழலில், இன்று பூஞ்ச் மாவட்டத்தின் கசாலியன் பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே கடும் மோதல் வெடித்தது. இதில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த இரண்டு தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
கொல்லப்பட்ட இருவரும் எல்லையைத் தாண்டி இந்தியப் பகுதிக்குள் ஊடுருவியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹல்காம் உள்ளிட்ட பகுதிகளில் ஊடுருவலை நிகழ்த்த தீவிரவாத அமைப்புகள் தொடர்ந்து முயன்று வரும் நிலையில், பாதுகாப்புப் படையினர் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இந்தத் தாக்குதலை முறியடித்துள்ளனர். கொல்லப்பட்ட தீவிரவாதிகளின் அடையாளம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.