தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
தூத்துக்குடி: தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் ரூ.4900 கோடி மதிப்புள்ள திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர்; கார்கில் வெற்றி தினத்தில் உயிர் தியாகம் செய்த வீரர்களை வணங்குகிறேன். கார்கில் வெற்றி தினத்தில் ராணுவ வீரர்களுக்கு தலை வணங்குகிறேன். வெளிநாட்டு சுற்றுப் பயணங்களை முடித்துக் கொண்டு ராமர் மண்ணுக்கு வந்தது பாக்கியம். இந்தியா மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை அதிகரித்து வருகிறது. திருச்செந்தூர் முருகன் ஆசியோடு தூத்துக்குடியில் வளர்ச்சிப் பணிகள் நடைபெறுகிறது.
தூத்துக்குடியில் மேம்படுத்தப்பட்ட விமான நிலையம் நாட்டின் பல நகரங்களை எளிதில் இணைக்கும். ரூ.2500 கோடி மதிப்பில் திறக்கப்பட்ட சாலைகள் சென்னையோடு இணைக்கும். சக்திவாய்ந்த பாரதத்துக்கு தூத்துக்குடி பங்களிப்பு ஆற்றி வருகிறது. வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை உருவாக்குவோம். தமிழ்நாடு வளர்ச்சியின் முக்கியத்துவத்தை கருதியே பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது. சுதேசி கப்பல்களை செலுத்தி ஆங்கிலேயர்களுக்கு சவால் விட்டவர் வ.உ.சிதம்பரனார். சுதந்திர பாரத கனவை உருவாக்கியவர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன், அழகுமுத்துகோன். அடிமைப்பட்டு கிடந்த காலத்திலேயே வ.உ.சி. கடல் வழி வாணிபத்தின் சக்தியை புரிந்து கொண்டவர்.
வ.உ.சி.யின் தொலைநோக்கு பார்வை போற்றுதலுக்குரியது. தூத்துக்குடி முத்துக்களை பில்கேட்ஸுக்கு பரிசாக அளித்ததாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார். இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் நாட்டின் வளர்ச்சிக்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது. பிரிட்டனில் விற்பனையாகும் 99% இந்திய பொருட்களின் விலை குறையும். உலகத்தின் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும். இங்கிலாந்து உடனான ஒப்பந்தம் இந்திய புத்தாக்க தொழில் நிறுவனங்களுக்கு பெரும் ஊக்கம் அளிக்கும் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்களின் பங்களிப்பால் ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி அடைந்துள்ளது.
தீவிரவாதிகளின் கட்டமைப்பு அழித்ததில் மேக் இன் இந்தியா திட்டம் பெரும் பங்களிப்பு அளித்துள்ளது. இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்களால் தீவிரவாதிகள் முகாம்கள் அழிக்கப்பட்டது. இந்திய தயாரிப்பு ஆயுதங்களால் தீவிரவாதிகளின் இருப்பிடங்கள் மண்ணோடு மண்ணாகின. ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் இந்தியாவின் பலம் கண்கூடாக தெரிந்தது என கூறினார். தொடர்ந்து பேசிய அவர்; தமிழ்நாட்டுக்கு ஏராளமான ரயில் திட்டங்களை ஒன்றிய அரசு அளித்துள்ளது. ஜம்மு செனாப் ரயில் பாலம் பொறியியல் அற்புதமாக கருதப்படுகிறது. நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலம் பாம்பனில் கட்டப்பட்டுள்ளது.
கூடங்குளம் அனுமின் திட்டத்தின் மூலம் மின்சார திட்டங்களுக்கான அடித்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. மின் உற்பத்தி அதிகரிப்பதால் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். மின் உற்பத்தியை அதிகரிப்பது தொழில் துறை வளர்ச்சிக்கு பெரும் பங்களிக்கிறது. தமிழ்நாட்டின் வளர்ச்சியோடு தொடர்புடைய கொள்கைகளுக்கு முன்னுரிமை கொடுக்கிறோம். தமிழ்நாட்டில் 77 ரயில் நிலையங்களில் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டுக்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ.3 லட்சம் கோடி நிதி அளிக்கப்பட்டுள்ளது. 11 ஆண்டுகளில் 11 மருத்துவ கல்லூரிகளை தமிழ்நாட்டுக்கு கொடுத்துள்ளோம். தமிழ்நாட்டின் வளர்ச்சியே எங்களது முன்னுரிமை. தூத்துக்குடி மண் புரட்சியின் சாட்சி என்று கூறினார்.