டெல்லியில் நடந்த செயின் பறிப்பு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு மயிலாடுதுறை எம்பி. சுதா கடிதம்..!!
டெல்லி: டெல்லியில் நடந்த செயின் பறிப்பு தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு மயிலாடுதுறை எம்பி. சுதா கடிதம் அனுப்பியுள்ளார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மயிலாடுதுறை எம்.பி. சுதா. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21ம் தேதி முதல் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இவர் டெல்லியில் உள்ளார். இந்நிலையில், இன்று நாடாளுமன்ற குடியிருப்பு அருகே சுதா நடைபயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது அப்பகுதி வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர், சுதா அணிந்திருந்த 4.5 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர். இதில் சுதாவுக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுதொடர்பாக சாணக்கியபுரி காவல் நிலையத்தில் காங்கிரஸ் எம்.பி. சுதா புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
இந்நிலையில், டெல்லியில் தூதரகங்கள், மாநில அரசின் இல்லங்கள் அமைந்துள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த சாணக்யாபுரி பகுதியில் நடைபயிற்சியின் போது செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்களை விரைந்து கைது செய்யுமாறு காங்., எம்.பி. சுதா, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பியுள்ளார். அதில், செயின் பறிப்பில் ஈடுபட்ட நபரை விரைவாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் தங்கச் சங்கிலியை பறித்து சென்ற போது தன்னுடைய கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மூலம் மர்ம நபரை பிடிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மேலும் எனது தங்கச் சங்கிலி மீட்கப்பட்டு, எனக்கு விரைவில் நீதி கிடைக்க உறுதியளிக்கவும் எனவும் அந்த கடிதத்தில் சுதா குறிப்பிட்டுள்ளார். தற்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் நகை பறிக்கபட்டுள்ளது பெரும் பேசுபொருளாக உள்ளது.