கோவை மாவட்டம் ஆலந்துறை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த யானை உயிரிழப்பு
கோவை காருண்யா நகர் பகுதியில் இருக்க கூடிய சபாரி மடை பகுதியில் நிர்மலா தேதி என்பவருக்கு சொந்தமான 10 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இது வனபகுதியை ஒட்டியுள்ளது. இந்த நிலையில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை அந்த வழியாக சென்ற போது தோட்டத்தில் இருந்த சுமார் 25 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது.
மேலும் அந்த கினற்றில் 20 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்த காரணத்தால் நீரில் மூழ்கிய ஆண் காட்டுயானை உயிரிழந்துள்ளது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் உயிரிழந்த காட்டுயானையின் உடலை 3 பொக்லைன் வாகனங்கள் மூலம் மீட்கும் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.
கினற்றின் அளவு 10அடி அகலமும், 25 அடி ஆழமும் உள்ளது. அந்த கிணறு தற்போது கைவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று இரவு வனப்பகுதியை விட்டு வெளியேறிய 10 வயது மதிக்கதக்க ஆண் காட்டுயானை நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.