தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் 40 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம், தட்டச்சர் பணியிடங்களுக்கு 9.6.2024 அன்று தேர்வு நடத்தப்பட்டு, தெரிவு செய்யப்பட்ட 39 நபர்களுக்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக தமிழ்நாடு முதலமைச்சர் இன்றைய தினம் 5 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். இப்புதிய தட்டச்சர்கள் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் கீழ் தமிழகமெங்குமுள்ள மாவட்ட மேலாளர் அலுவலகங்களிலும், முதுநிலை மண்டல மேலாளர் அலுவலகங்களிலும் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழக தலைமை அலுவலகத்திலும் பணிபுரிவர்.
கருணை அடிப்படையில் பணிநியமன ஆணை வழங்குதல் சிவகங்கை மாவட்டம், காரைக்குடி வட்டம், பள்ளத்தூரில் மதுபான சில்லறை விற்பனை கடையில் மார்ச் 2023-ஆம் ஆண்டு நடந்த பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவத்தில் பணியிலிருந்த விற்பனையாளர் அர்ஜுனன் என்பவர் பலத்த தீக்காயமுற்று மரணமடைந்தார்.
அர்ஜுனன் அவர்களின் மறைவிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இரங்கல் தெரிவிக்கப்பட்டு, அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்ததற்கிணங்க, மறைந்த அர்ஜுனன் அவர்களின் மனைவி திருமதி கிருஷ்ணவேனி அவர்களுக்கு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தில் கருணை அடிப்படையில் காலமுறை ஊதியத்தில் தூய்மைப் பணியாளர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளம் மற்றும் சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். இரகுபதி, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், இ.ஆ.ப., உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் குமார், இ.ஆ.ப., தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் எஸ்.விசாகன், இ.ஆ.ப., தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் திருமதி. சீமா அகர்வால், இ.கா.ப., காவல்துறை இயக்குநர் (தலைமையிடம்) வினீத் தேவ் வான்கடே, இ.கா.ப., தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சைலேஷ் குமார் யாதவ், இ.கா.ப., சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் முனைவர் மகேஷ்வர் தயாள், இ.கா.ப., தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மோதக், இ.கா.ப., சென்னை மாநகர காவல் ஆணையர் ஆ. அருண், இ.கா.ப., தடய அறிவியல் துறை இயக்குநர் முனைவர் சிவப்பிரியா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.