முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தலைமை செயலகம் வருகிறார்: பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைக்கிறார்
முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது அங்கிருந்தபடியே அரசு பணிகளை கவனித்தார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களுக்கு வந்திருந்த பொதுமக்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசினார். மாவட்ட கலெக்டர்களிடமும் ஆலோசனை நடத்தி, மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
அரசு பணிகளை மேற்கொண்ட அவர் கட்சி பணிகளையும் கவனித்தார். திமுக மண்டல பொறுப்பாளர்களை மருத்துவமனைக்கு அழைத்து ஆலோசனை மேற்கொண்டார்.உடல்நிலை சரியானதை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு திரும்பினார். மருத்துவர்கள் 3 நாட்கள் ஓய்வு எடுக்கும்படி முதல்வரிடம் கேட்டுக் கொண்டனர். அதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியில் எந்த நிகழ்ச்சிகளுக்கும் செல்லவில்லை.
இந்த நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை காலை தலைமை செயலகம் செல்கிறார். முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கிறார். கடந்த 10 நாட்களுக்கு பின்பு அவர் தலைமைச் செயலகம் வந்து வழக்கமான பணிகளை மேற்கொள்ள இருப்பதால் திமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.