பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில், சிறப்பு திட்ட செயலாக்கத் துறை சார்பில் திடக்கழிவு மேலாண்மையில் ஒருங்கிணைந்த கட்டமைப்பை உருவாக்கிடும் வகையில் தூய்மை தமிழ்நாடு நிறுவனத்திற்கும், சென்னை - இந்திய தொழில்நுட்ப நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது
தமிழ்நாட்டின் கலாச்சார உறவுகளை மேம்படுத்தும் "வேர்களைத் தேடி" திட்டத்தின் கீழ், 14 நாடுகளைச் சேர்ந்த 99 அயலகத் தமிழ் இளைஞர்களுக்கு, 1.8.2025 அன்று முதல் 15.8.2025 வரையிலான தமிழக பண்பாட்டுப் பயணத்திற்கான பயண குறிப்புகள், புத்தகங்கள், அடையாள அட்டை மற்றும் உடைகள் போன்ற பொருட்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை சார்பில் மாநிலத்தின் சுற்றுலாத் தலங்களை உலகத்தரத்தில் மேம்படுத்தும் நோக்கில், குண்டாறு அணை, ஏலகிரி, பூண்டி நீர்த்தேக்கம், முத்துக்குடா கடற்கரை மற்றும் மதுரை ஓட்டல் தமிழ்நாடு வளாகம் ஆகியவற்றில் 18 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் முடிவுற்ற 5 புதிய திட்டப்பணிகளையும், அருங்காட்சியக துறை சார்பில், சென்னை, எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் 6 கோடியே 84 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய நிருவாகக் கட்டடத்தையும் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை, சுற்றுலா மற்றும் சர்க்கரைத் துறை அமைச்சர் இரா. இராஜேந்திரன் அவர்கள் சந்தித்து, தமிழ்நாட்டிலுள்ள 5 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு புதுடெல்லியில் 3.7.2025 அன்று நடைபெற்ற விழாவில் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் சம்மேளனத்தால் வழங்கப்பட்ட விருதுகளை காண்பித்து வாழ்த்துப் பெற்று, கள்ளக்குறிச்சி-2 மற்றும் அரூர், சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளில் இலாப பங்கீட்டு ஈவுத்தொகையாக 22 கோடியே 60 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார்.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்கும் சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் சென்னை, பெரும்பாக்கத்தில் 6.94 கோடி ரூபாய் செலவில் அழகுப்படுத்தப்பட்ட பூங்கா மற்றும் வில்லிவாக்கம், பாடி, வடபழனி ஆகிய இடங்களில் 11.50 கோடி ரூபாய் செலவில் மேம்பாலங்களின் கீழ் அழகுபடுத்தும் பணிகள் ஆகிய 4 முடிவுற்றப் பணிகளை திறந்து வைத்து, 91.42 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 13 முதல்வர் படைப்பகங்கள் உள்ளிட்ட 26 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் சார்பில் திருவண்ணாமலையில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு 600 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 63,200 சதுர அடி கட்டுமான பரப்பளவில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.