பாஜ கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு மு.க.ஸ்டாலினுடன் ஓபிஎஸ் சந்திப்பு: முதல்வரை பிரேமலதாவும் சந்தித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு
திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நலம் தேறினார். தற்போது, அவர் அரசு பணி, கட்சி பணிகளை பார்க்க தொடங்கியுள்ளார். இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை வழக்கமாக செல்லும் சென்னை அடையாறு தியோசோபிக்கல் சொசைட்டி பார்க்கில் வாக்கிங் சென்றார். அந்த பார்க்கில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் வாக்கிங் வந்துள்ளார்.
அப்போது ஒருவரை ஒருவர் எதிர், எதிரே சந்தித்துக்கொண்டனர். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து கைக்குலுக்கி கொண்டனர். மேலும், முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓபிஎஸ் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். திடீரென முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் திடீரென ஒரே இடத்தில் சந்தித்தது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று பிற்பகல் பாஜவுடன் கூட்டணி இல்லை என்று ஓபிஎஸ் தரப்பில் அதிரடியாக அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. இதைதொடர்ந்து, நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் இல்லத்திற்கு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வந்தார். அவரை வீட்டு வாசல் வரை வந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அழைத்து சென்றார்.
தொடர்ந்து ஓபிஎஸ் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது ஓபிஎஸ் மகன் ஓ.பி.ரவிந்திரநாத் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. அப்போது அரசியல் நிலவரம் குறித்து பேசியதாக பற்றி விசாரிப்பதற்காக மட்டுமே இந்த சந்திப்பு நடந்தது. பாஜ கூட்டணியில் இருந்து வாபஸ் வாங்கியது குறித்து அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழுவின் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் அனைத்து கேள்விக்கும், உரிய முறையில் பதில் அளித்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில் வருமாறு: எதிர்காலத்தில் திமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதா? அரசியலில் நண்பர்களும் இல்லை. எதிரிகளும் இல்லை என்பதுதான் கடந்த கால வரலாறு. தேர்தல் நெருங்கும் நேரத்தில் எதுவும் நடக்கலாம். கூட்டணிக்கான சந்திப்பு என்று இதை எடுத்துக் கொள்ளலாமா?. அது உங்கள் வியூகம். எதிரி இல்லை. எல்லாரும் எல்லாருடனும் கூட்டணி அமைத்து இருக்கிறார்கள். தேர்தலில் நின்று இருக்கிறார்கள்.
ஜெயித்து இருக்கிறார்கள். தோல்வி கண்டு இருக்கிறார்கள். அது நடைமுறையில் ஜனநாயகத்தில் நடந்து கொண்டு தானே இருக்கிறது. கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் பாஜவில் இருந்து யாரேனும் பேசினார்களா? கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் பாஜ தலைவர்கள் இதுவரை என்னிடம் பேசவில்லை. அரசியலில் எனக்கு என்று ஒரு சுயமரியாதை இருக்கிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் 25 ஆண்டுகாலம் நேரடியாக பணியாற்றியிருக்கிறேன்.
அரசியல் ரீதியாக, கட்சி ரீதியாக பணியாற்றி இருக்கிறேன். அனைத்தும் எனக்கு தெரியும். இன்றைய கால சூழ்நிலையில் எனக்கு ஒரு வருத்தம் இருக்கிறது. என்ன வருத்தம் என்று சொன்னால், மக்களவையில் சமக்ரா சிக்ஷா நிதி குறித்து ஒரு கேள்வி எழுப்பிய போது, மும்மொழி கொள்கையை தமிழக அரசு ஏற்கவில்லை. அதனால், தான் அந்த நிதியை நிறுத்தி வைத்திருக்கிறோம் என்று சொல்லுகின்ற ஒரு சூழ்நிலை இன்றைக்கு இருக்கின்ற கல்வி அமைச்சருக்கு இருக்கிறது.
ஜனநாயக நாட்டில் இது ஏற்புடையது அல்ல என்பது எனது தனிப்பட்ட கருத்து. இன்றைக்கு இருக்கின்ற கட்சிகளில் மத்திய அரசாங்கமாக இருந்தாலும் சரி, மாநில அரசாக இருந்தாலும் சரி ஜனநாயக கடமையை செய்ய தவறிய பொருள் பற்றி தினந்தோறும் அறிக்கை வாயிலாக வெளியிட்டு கொண்டு இருக்கிறேன். மக்களை பாதிக்கின்ற விஷயங்கள் எதுவாக இருந்தாலும் சரி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து அறிக்கை வெளியிட்டு கொண்டு இருக்கிறேன்.
இது தான் இன்றைய நிலைமை. நாடாளுமன்ற தேர்தலில் யார் பிரதமராக வர வேண்டும் என்ற தேர்தல், எடப்பாடி பழனிசாமி யாருடன் இருந்தார். தேசிய அளவில் கூட்டணி அமைக்கிறார்கள். பிரதமருடன் அமர்ந்து கொண்டு கூட்டணி என்று அறிவிக்கிறார். ஒரு வாரத்தில் என்ன ஆச்சு. கூட்டணியில் இருந்து போய் விட்டார். அதன் பிறகு தனித்தனியாக தானே நின்றார்கள். இப்போது ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள். வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் கூறினார்.
ஒரே நாளில் அடுத்தடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலினை, ஓபிஎஸ் சந்தித்து பேசியதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் திமுக கூட்டணியில் ஓபிஎஸ் அணி சேர போகிறதா என்ற எதிர்பார்ப்பும் நிலவியுள்ளது. அதேநேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள இல்லத்தில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா திடீரென சந்தித்து பேசினார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இடம் பெற்றிருந்தது. நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி ஒப்பந்தத்தின்போது மாநிலங்களவை சீட்டை ஒதுக்குவதாக அதிமுக தெரிவித்ததாக பிரேமலதா கூறினார். ஆனால், அதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாநிலங்களவை சீட்டை தேமுதிகவிற்கு வழங்குவதாக எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்று கூறினார். இதனால், அதிமுக, தேமுதிக மோதல் விஸ்வரூபம் எடுத்தது. ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வந்தனர்.
இந்நிலையில் திடீரென எடப்பாடி பழனிசாமி 2026ம் ஆண்டில் தேமுதிகவுக்கு ஒரு மாநிலங்களவை இடம் ஒதுக்கப்படும் என்று அறிவித்தார். அதே நேரத்தில் வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்பதை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா இதுவரை அறிவிக்கவில்லை. வரும் சட்டமன்ற தேர்தல் நிலைப்பாடு மற்றும் யாருடன் கூட்டணி என்பது குறித்து அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் தேமுதிக மாநாட்டில் அறிவிக்கப்படும் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.
அதே நேரத்தில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்பது கேள்விக்குறியாகி வருகிறது.இந்நிலையில் பிரேமலதா முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியுள்ளார். இது அடுத்த ஆண்டு நடைபெற சட்டமன்ற தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமா என்ற கேள்வியும் எழுந்துள்ளதால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.