பவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
ஈரோடு: பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தற்போது உயர்ந்து வருகிறது. பருவமழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. பவானிசாகர் அணை நீர்ப்பிடிப்பு பகுதியான, நீலகிரி மாவட்ட மலைப்பகுதி மற்றும் அணை ஒட்டியுள்ள வனப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மூன்று நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக, அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டம் பில்லூர் அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வரத்து அதிகரித்தது வருகிறது. அணையின் நீர்மட்டமும் உயர்ந்து வருகிறது.
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் இன்று 03.08.2025 காலை 10.00 மணிக்கு 101.28 அடியை எட்டியுள்ளது. அணையில் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணையின் நீர்மட்டம் நாளை (04.08.2025) 102 அடியை எட்டும் என்றும், அணையில் இருந்து உபரி நீர் பவானி ஆற்றில் எந்த நேரத்திலும் திறந்து விடப்படலாம் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.
எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது