வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. அதிகபட்சமாக, கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னக்கல்லாரில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஏழு நாட்களுக்கு ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று (ஜூலை 24, 2025) காலை 05:30 மணி அளவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று, மேற்கு-வடமேற்கு திசையில் மேற்கு வங்காளம் – வடக்கு ஒரிசா கடலோரப்பகுதிகளை நோக்கி அடுத்த 48 மணி நேரத்தில் நகரக்கூடும். மேலும், மகாராஷ்டிரா - கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் அரபிக்கடல் பகுதிகளிலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது.
ஜூலை 24, 25 தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசக்கூடும். நீலகிரி, தேனி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.