தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜவுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு துரோகம் செய்யும் அதிமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடும் தாக்கு

சென்னை: தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அ.தி.மு.க, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.வுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 7வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம் என்று தொண்டர்களுக்கு திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் தொண்டர்களுக்கு எழுதிய கடிதம் வருமாறு:

கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் நினைவு போற்றும் மடல். நெடுநாள் கழித்து, உங்களுடன் இந்த மடல் வாயிலாக உரையாடுகிறேன். காரணம், சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் வீட்டில் ஓய்வெடுத்தும் வந்தேன். சிகிச்சை ஓய்வு என்று சொன்னாலும், மருத்துவமனையில் இருந்தபடியே அரசு அலுவல்களையும் கழகப் பணிகளையும் செய்துகொண்டுதான் இருந்தேன். ஓய்வுக்குப் பிறகு, தலைமைச் செயலகத்தில் வழக்கமான பணிகளை தொடங்கியும், நேற்று கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில், ‘உடன்பிறப்பே வா’ என உத்திரமேரூர் தொகுதி நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தேன். அரசுப் பணிகளுக்கிடையில், நேரம் கிடைக்கும்போதெல்லாம் இதுவரையில் 39 தொகுதிகளின் திமுக நிர்வாகிகளைச் சந்தித்திருக்கிறேன். இந்த சந்திப்பு அடுத்தடுத்து தொடர உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் கலைஞரின் ஆட்சியின் சமூகநீதிக் கொள்கைகளால், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளால், பொருளாதாரம் சார்ந்த திட்டங்களால் ஏதேனும் ஒரு வகையில் பயன்பெற்று உயர்ந்தது போலவே, நமது திராவிட மாடல் அரசின் திட்டங்களால், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஒரு பயனையாவது பெற்று முன்னேற்றம் கண்டு வருவதை நாடறியும். கல்வியிலும் சமுதாய முன்னேற்றத்திலும் தனிநபர் வருமானத்திலும் பொருளாதார வளர்ச்சியிலும் தமிழ்நாடு முன்னணி மாநிலமாகக் திகழ்வதை நாம் மட்டும் சொல்லவில்லை, ஒன்றிய பா.ஜ. அரசின் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் பல்வேறு துறைகளின் அறிக்கைகளே உறுதி செய்கின்றன. இவையனைத்தும் கலைஞர் கட்டமைத்த வழித்தடத்தில் தொடரும் நம்முடைய பயணத்தின் வெற்றிகள்.

நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான். முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின்திட்டம், சொத்து வரி உள்ளிட்ட ஒன்றிய பா.ஜ. அரசின் வஞ்சகத் திட்டங்களுக்கு அடிமை சாசனம் எழுதிக் கொடுத்ததால், தமிழ்நாடு அதன் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காத்திடுவதற்காக நாடாளுமன்றத்தில் போர்க்குரல் எழுப்புவதோடு, உச்ச நீதிமன்றத்திலும் சட்டப்போராட்டத்தை நடத்துகிறது திமுக அரசு. அதற்கான நெஞ்சுரத்தை நமக்கு தந்திருப்பவர் கலைஞர்தான்.

பா.ஜ. ஆட்சி செய்யாத - ஆட்சிக்கே வர முடியாத மாநிலங்களில் ஆளுநர்களை வைத்து அதிகாரப் பறிப்பு செய்யும் ஜனநாயகப் படுகொலை தொடர்ந்து வரும் நிலையில், உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு முன்னெடுத்த சட்டப்போராட்டத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே அதிகாரம் படைத்தது என்பது நிலைநாட்டப்பட்டு, தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி, இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான ஜனநாயக நம்பிக்கை வலுப்பெற்றுள்ளது. இந்த போராட்டங்களை இன்னும் வலிமையாகத் தொடர வேண்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அ.தி.மு.க, தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.வுடன் கூட்டணி சேர்ந்து தமிழர்களுக்கு மிகப் பெரும் துரோகத்தை இழைத்து வருகிறது.

உண்மையான அ.தி.மு.க தொண்டர்களே மனம் புழுங்குகிற வகையில், அடிப்படைக் கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு பா.ஜ.வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து, பொய்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். இந்தியாவின் முதல் செம்மொழி என்ற தகுதிபெற்ற தமிழுக்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்குகிற தமிழர் விரோத ஒன்றிய பா.ஜ. அரசு, சமஸ்கிருத மொழிக்குப் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய்களைக் கொட்டிக் கொடுக்கிறது. இந்தி அல்லாத மொழிகளைச் சிதைக்கின்ற வகையில் ‘தேசியக் கல்விக் கொள்கை 2020‘ மூலம் இந்தி மொழியைத் திணிக்க முயற்சிக்கிறது.

ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கிடைக்கின்ற கல்வியைப் பறிக்கின்ற வகையில் குலக்கல்வி முறையைக் கொண்டு வரத் துடிக்கிறது. அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்ட தமிழர் பண்பாட்டு அடையாளமான கீழடி அகழாய்வு முடிவுகளை ஒன்றிய பா.ஜ. அரசு வெளியிட மறுக்கிறது. ஆரியப் பண்பாட்டை நம் மீது திணிக்கப் பார்க்கிறது. கலைஞர் இன்று நம்முடன் இருந்திருந்தால் எத்தகைய உணர்வெழுச்சியுடன் ஒன்றிய அரசை எதிர்த்து நிற்பாரோ, அவரிடம் அரசியல் பாடம் கற்ற கழகத்தினரான நாமும் அதே உணர்வுடன் ஒன்றிய பா.ஜ. அரசின் தமிழர் விரோத - மனிதகுல விரோத சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம். எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வோ அடங்கி ஒடுங்கி பா.ஜ.வுக்கு அடிமைச் சேவகம் செய்து கொண்டிருக்கிறது.

“வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை“ என்றார் கலைஞர். கழகத்தினர் களத்தில் வீரர்களாக நிற்கிறார். தமிழைக் காக்கவும் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்கவும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் கலைஞர் வழியில் உறுதியுடனும் தெளிவுடனும் தன் போராட்டத்தை முன்னெடுக்கும். தமிழ் மக்களின் வளமான வாழ்வுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும். கலைஞரின் நினைவுகளை நெஞ்சிலேந்தி, கொள்கைவழிப் பயணத்தைத் தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் 7வது முறையாக திமுக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம். ஓரணியில் தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங்கிணைத்துக் களத்தில் வெல்வோம். கலைஞர் புகழ் ஓங்குக. திராவிட முன்னேற்றக் கழகம் வெல்க. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆக.7ல் கலைஞர் நினைவு நாள் பேரணி அனைவருக்கும் அழைப்பு

முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘எப்போதும் மக்களுடன் நிற்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் கலைஞர் கட்டிக் காத்த இயக்கம். அவர் இல்லை என்று எண்ணாமல், என்றென்றும் அவர் நினைவுகளில் வாழ்கின்ற கோடிக்கணக்கான உடன்பிறப்புகளில் உங்களில் ஒருவனான நானும் இருக்கிறேன். ஆகஸ்ட் 7 அன்று நம் உயிர்நிகர் தலைவரின் நினைவு நாளில் தமிழர் வாழும் நிலமெங்கும் அவர் நினைவைப் போற்றுவோம்.

வங்கக் கடற்கரையில் தன் அண்ணனுடன் நிரந்தர ஓய்வு கொண்டுள்ள கலைஞரின் நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7 அன்று நடைபெறும் அமைதிப் பேரணியில் உடன்பிறப்புகள் கடலெனத் திரண்டு வணக்கத்தைச் செலுத்துவோம். மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்டுள்ள கலைஞரின் உருவச் சிலைகளுக்கு அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் - உடன்பிறப்புகள் மாலையிட்டு மரியாதை செலுத்திட வேண்டும். கிளைகள்தோறும் கலைஞரின் நினைவு போற்றப்பட வேண்டும். இந்நிகழ்வுகளில் நிர்வாகிகள் காலை 7 மணியளவில் பங்கேற்றிட வேண்டும். வீடுகளிலும் வீதிகளிலும் தமிழ்காத்த போராளியாம் கலைஞரின் உருவப் படங்களுக்கு, மலர்தூவி வணக்கம் செலுத்துங்கள்’ என்று கூறி உள்ளார்.