பண்ணாரி அம்மன் கோயிலில் ரூ.11.50 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டு வரும் 9 நிலை ராஜகோபுரம் கட்டுமான பணிகள் தீவிரம்
சத்தியமங்கலம் : பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயிலில் ரூ.11.50 கோடி செலவில் புதிதாக ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற அம்மன் திருத்தலங்களில் பண்ணாரி மாரியம்மன் கோயில் முக்கியமான திருத்தலமாக விளங்குகிறது. இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பண்ணாரி அம்மன் கோயில் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி அமைந்துள்ளது.
பண்ணாரி அம்மன் கோயிலுக்கு ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் தினந்தோறும் பக்தர்கள் வந்து செல்கின்றனர். நாளுக்கு நாள் பக்தர்கள் வருகை அதிகரித்து வரும் நிலையில் கோயிலில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பண்ணாரி அம்மன் கோயிலை பொறுத்தவரை ஆண்டிற்கு ஒருமுறை பங்குனி மாதம் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்வாக கருதப்படுகிறது. இந்த குண்டம் திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து குண்டம் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபடுவர். அதிகாலை 4 மணிக்கு குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கி மாலை 4 மணி வரை தொடர்ந்து 12 மணி நேரம் பக்தர்கள் தீ மிதிக்கும் நிகழ்வு பண்ணாரி அம்மன் கோயிலை தவிர வேற எந்த கோயிலிலும் நடைபெறுவதில்லை. இந்த கோயிலில் அதிகாலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 9 மணிக்கு நடை சாத்தப்படுகிறது. மேலும் அம்மனுக்கு தினமும் நான்கு கால பூஜை செய்யப்படுகிறது.
கோயிலில் பக்தர்களுக்கு தினமும் மதிய வேளையில் அன்னதானம் வழங்கப்படுகிறது. மேலும் காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. மேலும் கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் காய்ச்சிய பால் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. இது தவிர கோயிலில் உள்ள கருணை இல்லத்தில் ஏழை எளிய குழந்தைகள் சேர்க்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனர்.
கடந்த 2021ம் ஆண்டு திமுக தலைமையிலான அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் பண்ணாரி அம்மன் கோயிலில் பல்வேறு திட்ட பணிகள் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. தற்போது கோயிலில் முன் மண்டபம் விரிவாக்க பணி, ராஜகோபுரம் கட்டுமான பணி, பக்தர்களின் வசதிக்காக நவீன கழிப்பிடங்கள் கட்டுமான பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பண்ணாரி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்ட வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்த நிலையில் கடந்த 2022ம் ஆண்டு சட்டமன்றத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பண்ணாரி அம்மன் கோயிலில் ரூ.11.50 கோடி செலவில் 112 அடி உயரம் கொண்ட ஒன்பது நிலை ராஜகோபுரம் கட்டப்படும் என அறிவித்தார். இதைத்தொடர்ந்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பண்ணாரி அம்மன் கோயிலுக்கு வருகை தந்து ஆய்வு பணி மேற்கொண்டு ராஜகோபுரம் கட்டப்படும் இடத்தை நேரில் பார்வையிட்டார்.
பின்னர் டெண்டர் விடப்பட்டு கடந்த 2023ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ம் தேதி ராஜகோபுரம் கட்டுமான பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கோயிலின் முன்பு பிரதான நுழைவுவாயில் பகுதியில் ராஜகோபுரம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
கட்டுமான பணிகளை அவ்வப்போது இந்து சமய அறநிலையத்துறை கட்டுமான பிரிவு பொறியாளர்கள், ஈரோடு மண்டல இணை ஆணையர் பரஞ்ஜோதி, பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையர் (பொறுப்பு) நந்தகுமார், கோயில் பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி தங்கவேல், புஷ்பலதா கோதண்டராமன், அமுதா பூங்கொடி ஆகியோர் அவ்வப்போது ஆய்வுப்பணி மேற்கொள்கின்றனர்.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: பண்ணாரி அம்மன் கோயிலில் ராஜகோபுரம் கட்டுமான பணி நடைபெற்று வருவது மிகுந்த மகிழ்ச்சி அளித்துள்ளது. அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் தற்போது கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இதற்கென கட்டுமான பணியில் திறமை வாய்ந்த சிற்ப வேலைப்பாடுகள் கற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ராஜகோபுரம் கட்டுமான பணிகள் நிறைவுபெறும் பட்சத்தில் பண்ணாரி அம்மன் கோயில் முகப்பு பக்தர்களின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமையும் என எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.