உலகின் 100 சிறந்த வங்கிகள் பட்டியலில் மேலும் சில இந்திய வங்கிகளுக்கு இடம்: ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை
புதுடெல்லி: பொருளாதார விரிவாக்கம் வளர்ச்சியின் வேகத்தை கருத்தில் கொண்டு உலகின் முதல் 100 வங்கிகள் பட்டியலில் மேலும் சில இந்திய வங்கிகள் மற்றும் கடன் வழங்குனர்கள் இடம் பெறுவார்கள் என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். டெல்லி பொருளாதார பள்ளியில் விகேஆர்வி.ராவ் நினைவு சொற்பொழிவு நேற்று நடந்தது.
இதில், ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா பேசுகையில்,‘‘பொது துறை,தனியார் துறையில் பல வங்கிகள் உள்ளன. அவை வேகமாகக வளர்ந்து வருகின்றன. அந்த வங்கிகளின் வளர்ச்சியை பார்க்கையில் கூடிய சீக்கிரத்தில் சில இந்திய வங்கிகள் உலக அளவில் 100 சிறந்த வங்கிகளின் பட்டியலில் இடம்பெற வாய்ப்பு உள்ளது. அதே போல் பல உள்நாட்டு கடன் வழங்குனர்கள் இடம் பெறுவார்கள்.
தற்போது எஸ்பிஐ மற்றும் எச்டிஎப்சி ஆகிய வங்கிகள் உலகளவில் 43 மற்றும் 73வது இடத்தில் உள்ளன. மார்ச் 2025 ல் முடிவடைந்த நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் ஒட்டுமொத்த லாபம் ரூ.1.78 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 26 சதவீதம் அதிகம். 12 பொதுத்துறை வங்கிகளும் நிதியாண்டு 24 ல் மொத்தம் ரூ.1.41 லட்சம் கோடி லாபம் ஈட்டியுள்ளன’’ என்றார்.