ரூ.13,500 கோடி வங்கி மோசடி வழக்கில் சோக்சியின் 4 பிளாட்டுகளை விற்க ஈடி அனுமதி
புதுடெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி மோசடியில் ஈடுபட்டதாக வைர வியாபாரி மெகுல் சோக்சி மீது புகார் எழுந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணையை தவிர்ப்பதற்காக 2018ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பி ஓடினார். தற்போது பெல்ஜியத்தில் இருக்கும் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மெகுல் சோக்சிக்கு எதிரான பணமோசடி விசாரணையின் ஒரு பகுதியாக, அவரது வழக்கில் அமலாக்கத்துறையால் இணைக்கப்பட்ட மும்பையில் உள்ள நான்கு பிளாட்களை நவ.21 அன்று ஏலம் விட்டு விற்பனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தற்போது மொகுல் சோக்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் வழங்க வசதியாக சொத்துக்களை பணமாக்கும் நடவடிக்கை அடிப்படையில் விற்பனைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை மெகுல் சோக்சிக்கு மும்பை, கொல்கத்தா மற்றும் சூரத்தில் அமைந்துள்ள ரூ.310 கோடி மதிப்புள்ள அசையா மற்றும் அசையும் சொத்துக்கள் பணமாக்கும் நடவடிக்கை அடிப்படையில் அமலாக்கத்துறை ஒப்படைத்துள்ளது.