வங்கதேச மாஜி பிரதமர் ஷேக் ஹசீனாவை கைது செய்ய உத்தரவு
டாக்கா: வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவராக இருந்த பிரதமர் ஷேக் ஹசீனா (72), கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நடந்த மாணவர் போராட்டத்தில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, இந்தியாவுக்கு தப்பி சென்றார். தற்போது நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு வங்கதேசத்தில் உள்ளது. அங்கு, 2026ம் ஆண்டு பிப்ரவரியில் பொதுத்தேர்தலை நடத்திட தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
பதவி இழந்து நாட்டைவிட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா மீது ஏராளமான கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் வாக்களிக்க தடைவிதித்தும், தேசிய அடையாள அட்டை முடக்கி வைத்தும் தேர்தல் கமிஷன் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், ஷேக் ஹசீனாவை கைது செய்ய சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
அவாமி லீக் ஆட்சி காலத்தில் ஏராளமானோர் காணாமல் போன வழக்கை, நீதிபதி கோலாம் மோர்டுசா மொஜூம்தர் தலைமையிலான 3 உறுப்பினர்கள் கொண்ட சர்வதேச குற்றத் தீர்ப்பாயம் விசாரித்தது. இது தொடர்பான வழக்கில் ஷேக் ஹசீனா முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.
தற்போது, அவர் வங்கதேசத்தில் இல்லாத நிலையில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, புலனாய்வு இயக்குநர் அதிகாரிகள் உள்பட 29 பேருக்கு எதிராக கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர்களை வரும் 22ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்றும் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.