வங்கதேச மாஜி பிரதமர் ஹசீனா தேர்தலில் வாக்களிக்க தடை
டாக்கா: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா அடுத்த ஆண்டு நடைபெறும் தேர்தலில் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று அந்த நாட்டின் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்ந்தது. மாணவர் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதையடுத்து ஷேக் ஹசீனா பதவியை ராஜினாமா செய்து விட்டு இந்தியாவுக்கு தப்பி வந்தார்.
இதனால் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் வங்கதேசத்தில் பொது தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அடுத்த ஆண்டு நடக்க உள்ள தேர்தலில்,முன்னாள் பிரதமர் ஹசீனா,தேர்தலில் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வங்கதேச தேர்தல் ஆணைய செயலாளர் அக்தார் அகமது, ‘‘வெளிநாட்டில் வசிக்கிறவர்களில் யாருடைய தேசிய அடையாள அட்டைகள்(என்ஐடி) முடக்கப்பட்டுள்ளதோ அவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியாது.
ஹசீனாவின் என்ஐடி அட்டை முடக்கி வைக்கப்பட்டுள்ளது’’ என்றார். வங்கதேசத்தின் டாக்கா டிரிபியூன் பத்திரிகை வெளியிட்ட செய்தியில், ஹசீனா,அவரது மகன் சஜீப் வாஜெத்,மகள் சைமா வாஜெத் ஆகியோர் வாக்களிக்க முடியாது. ஹசீனாவின் சகோதரி ரெஹனா, அவருடைய மகள்கள் துலிப் ரிஸ்வானா சித்திக், அஸ்மினா சித்திக் உள்பட அவருடைய உறவினர்கள் பலர் வாக்களிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளது.