வங்கதேசத்தை வீழ்த்தி பைனலில் பாகிஸ்தான்
துபாய்: ஆசிய கோப்பை டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் வங்கதேசத்தை 11 ரன் வித்தியாசத்தில் போராடி வென்று பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்றிரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற வங்கதேச அணி பவுலிங் தேர்வு செய்தது. அதற்கு கைமேல் பலனாக ஆட்டத்தின் பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டக்காரர்கள் பர்கான் 4, சயிம் அயூப் 0 ரன்னிலும் அதைத் தொடர்ந்து பகர் ஜமான் 13 ரன், உசேன் தாலட் 3 ரன், கேப்டன் சல்மான் ஆகா 19 ரன்னிலும் வெளியேற 10.5 ஓவரில் 55 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
அடுத்து வந்த ஷாகின் அப்ரிடி 2 சிக்சர் பறக்கவிட்டு 19 ரன்னில் வெளியேறினார். கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய ஹாரிஸ் 31, நவாஸ் 25 ரன் எடுத்து கைகொடுத்தனர். 20 ஓவர் முடிவில் பாகிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 135 ரன்கள் எடுத்தது. தாக்ஷின் அகமத் 3 விக்கெட் வீழ்த்தினார். அடுத்ததாக 136 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி பேட்ஸ்மேன்கள் மோசமாக விளையாட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்து 11 ரன் வித்தியாசத்தில் தோற்றது.
அதிகபட்சமாக ஷாமிம் ஹூசைன் 30 ரன் எடுத்தார். பாகிஸ்தான் அணியில் ஷாஹீன், ஹரிஸ் ராப் தலா 3 விக்கெட், அயூப் 2, நவாஸ் 1 விக்கெட் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான், இந்தியாவுடன் மோத தகுதி பெற்றுள்ளது.