ரூ.3,600 கோடி ஹெலிகாப்டர் ஊழல் வழக்கு: நீண்ட காலமாக சிறையில் இருந்த இங்கிலாந்தின் மைக்கேலுக்கு ஜாமீன்
புதுடெல்லி: இந்திய விமானப்படைக்கு அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் 12 விஐபி ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2018ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், சுமார் 3,600 கோடி ரூபாய் மதிப்பிலான அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படுகிறார். இவர் மீதான விசாரணை நீண்ட காலமாக நடந்து வருவதால், மேலும் சிறையில் அவரை வைத்திருப்பதற்கான போதுமான காரணங்கள் இல்லை என்று டெல்லி உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது.
மேலும் மைக்கேலுக்கு கடுமையான ஜாமீன் நிபந்தனைகளை விதித்துள்ளது. அவர் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது. விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தொடர்ந்து அவரை கண்காணிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு, அகஸ்டா வெஸ்ட்லேண்ட் வழக்கில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை இந்த வழக்கில் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் உயர் நீதிமன்றத்தின் இந்த ஜாமீன் முடிவை எதிர்த்து விசாரணை அமைப்புகள் மேல்முறையீடு செய்யலாம் என்று கூறப்படுகிறது.