ஓய்வுபெற்ற கைரேகை பிரிவு ஊழியருக்கு ஐகோர்ட் நிபந்தனை ஜாமீன்
சென்னை: கரூரில் செப்டம்பர் 27ம் தேதி த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இதையடுத்து, கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்து உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியை விமர்சித்து, காவல்துறையில் கைரேகை பிரிவில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்ற வரதராஜன், சமூக வலைதளத்தில் அவதுாறு கருத்துகளை வெளியிட்டார். இதையடுத்து, அவரை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.இதையடுத்து, ஜாமீன் கோரி வரதராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு, நீதிபதி கே.ராஜசேகர் முன்பு விசாரணைக்கு வந்தபோது காவல்துறை தரப்பில், மனுதாரருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுதாரர் தான் சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோக்களை நீக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மனுதாரர் மத்திய குற்ற பிரிவு போலீசார் முன்பு 2 வாரங்களுக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்து உத்தரவிட்டார்.