பைஜு ரவீந்திரனுக்கு ரூ.9591 கோடி அபராதம்: அமெரிக்க நீதிமன்றம் அதிரடி
புதுடெல்லி: கடந்த 2021ம் ஆண்டு உருவாக்கப்பட்ட பைஜூஸ் ஆல்பா, தனிப்பட்ட வணிகச் செயல்பாடுகள் எதுவும் இல்லாத ஒரு சிறப்பு நோக்க வாகனம் ஆகும். பைஜூவுக்காக உலகளாவிய கடன் வழங்குநர்களின் ஒரு குழுமத்திலிருந்து 1.2 பில்லியன் டாலர் கடனை திரட்டுவதற்காக இதை உருவாக்கினர். இந்தப் பணம் முதலில் மியாமியை தளமாகக் கொண்ட கேம்ஷாப்ட் கேபிடல் என்ற நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது. அங்கிருந்து மீண்டும் பைஜூ மற்றும் மற்ற தொடர்புடைய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டது. இந்த நிதியை முறையற்ற முறையில் கையாண்டதாக கடன் வழங்குனர்கள் வழக்கு தொடர்ந்தனர்.இந்தச் செயல்பாட்டில் பைஜூ ரவீந்திரன் நேரடியாக ஈடுபட்டதை நீதிமன்றம் கண்டறிந்ததால், அவருக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பல முறை நீதிமன்றத்தில் ஆஜராகாததுடன், முக்கிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்ற உத்தரவுகளையும் புறக்கணித்ததால், அவருக்கு ரூ.9,591 கோடி தொகையை திருப்பிச் செலுத்த அமெரிக்க திவால் நிலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.