முதலுக்கே மோசம் வந்துவிடும் என பதுங்கி இருக்கும் இலைக்கட்சி தலைவர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா
‘‘யூனியனில் ‘கை’ உஷாரானதால் எஸ்ஐஆர் களப்பணிக்கு சென்ற வாக்குச்சாவடி அலுவலர்கள் பந்தாடப்பட்டு விட்டாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘தமிழகத்தில் எஸ்ஐஆர் களப்பணி தீவிரமாக நடக்குதாம்.. கடந்த 3 தினங்களாக வீடுவீடாக விசிட் அடித்தும் பாதியளவு விண்ணப்பம் கூட அலுவலர்களிடம் தீர்ந்தபாடில்லையாம்.. நிலைமை இப்படியிருக்க அண்டை யூனியனிலோ எஸ்ஐஆரில் தாமரை, ஜக்கு தலையீடு புதுமையாக இருப்பதால் எப்ஐஆர் கேட்டு ‘கை’ போர்க்கொடி தூக்கியதாம்.. ‘வாக்குத் திருட்டு... உஷார் மக்களே...’ என தேர்தல் துறையை கையின் மாநில தலைமை கடுமையாக போர்க்கொடி தூக்கியதாம்.. கட்சி பிரமுகர்களுடன் கணக்கெடுப்பு படிவம் வழங்கிய வாக்குச்சாவடி அலுவலர் இருவர் உடனே அங்கிருந்து வாக்குப்பதிவு அதிகாரியால் பந்தாடப்பட்டார்களாம்.. உடனே மாற்று நபர்கள் நியமித்ததோடு, வேண்டுமெனில் பூத் கமிட்டியினர் உடன் செல்லலாம் என்ற அறிவிப்பை முன்மொழிந்ததாம்.. முகவர் தவித்து கட்சி நபர்கள் கூடவே கூடாது என எச்சரிக்கை வழிகாட்டுதல்கள் வழங்கினாலும் ஆங்காங்கே யூனியன் மக்கள் ஓட்டுச்சாவடி அலுலர்களிடம் கேள்விகள் கேட்பதோடு கூடுதல் கால அவகாசம் கொடுக்காமல் அவசர கதி ஏன் என பிரச்னை செய்வதால் பரிதவித்து வர்றாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘புதுச்சேரி அரசியலில் புதிய அணிகளால் மலராத கட்சியிலும் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாமே..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘அரசியல் கூத்துகளுக்கு பெயர்போன புதுச்சேரியில் தேர்தல் கூத்துகள் இப்போதே ஆரம்பித்து விட்டதாம்.. இதுவரை 7 அணிகள் முளைத்துள்ள நிலையில், நாங்க தான் அடுத்த ஆட்சி என மார்தட்டி உள்ளார்களாம்.. வாக்காளர்களை கவர குறிப்பிட்ட தொகுதிகளில் சில பிரபலங்கள் தாராளம் காட்டுகிறார்களாம்.. புதிய அணிகளால் மலராத கூட்டணியில் புகைச்சலும் அவ்வப்போது பூதாகரமாகிறதாம்.. கடும் அதிருப்தியில் ஆட்சி காலத்தை புல்லட்சாமி நகர்த்தி வர, மேலிடம்... மேலிடம்... என சொல்லி சொல்லியே தட்டிக் கழிப்பதால் அப்செட்டில் உள்ளதாம் புல்லட்சாமியின் ஜக்கு தரப்பு. 3 மாதமாகியும் இலாகா இல்லாததால் தனித்துவமான விடுதலை நாள் கொடியேற்றத்தையே புறக்கணித்தாராம் முகம் மலராத முழம்குமார்.. புல்லட்சாமியின் மருமகனும் விழாவில் பங்கேற்காததால் மேலும் விரிசல் அதிகரித்துள்ளதாம்.. இதன் தாக்கத்தை புல்லட்சாமியின் பொதுவான செயலாளரிடம் காண முடிகிறதாம்.. எல்லாத்தையும் மேலிடத்தில சொல்லிட்டோம்... சொல்லிட்டோம்... என்றால் எங்கள் கேள்விக்கான தீர்வுதான் என்ன? என கொந்தளித்து வருகிறாராம்.. கூட்டணி பத்தியும் எதுவும் சொல்ல முடியாது என எச்சரிக்கை அலாரமும் அடித்துள்ளாராம்.. இதுபற்றிதான் புதுச்சேரி அரசியலில் தற்போதைக்கு பரவலாக பேச்சு..’’ என்கிறார் விக்கியானந்தா.
‘‘தந்தை -மகன் மோதலால் இலைக்கட்சி தலைவர் தவிப்பில் இருக்கிறாராமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தைலாபுரத்து தந்தையும், பனையூர் மகனும் உச்சக்கட்ட மோதலில் இருப்பது ஊருக்கே தெரிந்த விஷயம்.. டெல்லி துணையுடன் மாம்பழம் கட்சியை மகன் தனது கைக்குள் கொண்டுபோயிட்டாராம்.. இதனை நன்கு தெரிந்து கொண்ட தந்தையோ, நான் உருவாக்கிய கட்சி.. தனிக்கட்சியை தொடங்கிக்கோ என வாய் வலிக்க சொல்லிக்கிட்டே இருக்காராம்.. இதற்கெல்லாம் பதில் கொடுக்க முடியாதுன்னு மகன் மறுத்துட்டாராம்.. அதே நேரத்தில் மாம்பழம் கட்சியின் தலைவருன்னு மகன் கொடுத்த கடிதத்தை பெற்றுக்கொண்ட தேர்தல் ஆணையம் அதனை அங்கீகரித்துவிட்டதாம்.. தந்தை அப்பீல் செய்த நிலையில், நன்றாக ஆய்வு செய்து சொல்லுவோமுன்னு சொன்ன ஆணையமோ தற்போது வாய்திறக்க மறுக்குதாம்.. பீகார் தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறியதால் தான் தானே மாம்பழத்தை கொடுத்தீங்கன்னு சொன்னீங்க... அந்த தேர்தலில் போட்டியிடாமல் உங்களை ஏமாத்திட்டாரு.. இதனை புரிந்து கொள்ள மாட்டீர்களா என தந்தை தரப்பு ஆணையத்தின் காதில் ஊதுறாங்களாம்.. ஆனால் கதவை திறக்காமல் தூங்குவதுபோல் நடிச்சிக்கிட்டு இருக்குதாம்.. தேர்தல் வரும்வரை இப்படியே இழுத்துக்கொண்டே சென்றிடுவாங்களாம்.. கடைசி நேரத்தில் தந்தை தரப்புக்கு மாம்பழம் இல்லை என கைவிரிக்க போறாங்களாம்.. அதோடு தந்தையை அரசியலில் இருந்தே ஒதுக்கிவிடவும் மகன் திட்டம் வச்சி செயல்படுத்துவதாக தந்தை தரப்பு பாட்டாளி சொந்தங்கள் சொல்றாங்க.. மலராத கட்சியுடன் கூட்டணி வச்சிக்கிடணுமுன்னு மகன் தரப்பும், அதே கூட்டணியில் உள்ள இலைக்கட்சியுடன் சேரணுமுன்னு தந்தையும் ஆவலா இருக்காங்களாம்.. ஆனால் தந்தை தரப்பிடம் யாருமே இல்லை என கூட்டணியின் மேலிடத்திடம் சொல்லிட்டாங்களாம் மகன் தரப்பு.. இதனை தெரிஞ்சிக்கிட்ட இலைக்கட்சி தலைவர் வாய்திறக்க மறுக்குறாராம்.. எடப்பாடி தொகுதியில் மகன் தரப்பு பாட்டாளிகள் தான் அதிகளவில் இருக்காங்களாம்.. தற்போதிருக்கும் நிலையில் வாய்திறந்தால் தனது முதலுக்கே மோசம் ஆகிடும் என்ற எண்ணத்தில் பதுங்கியிருக்காராம்.. இதனால அடிக்கடி தன்னை சந்திக்கும் தந்தை தரப்பு எம்எல்ஏவிடம் கூட அரசியல் பேசுவதையே தவிர்க்கிறாராம் இலைக்கட்சி தலைவர்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘வரக்கூடாது, வரக்கூடாது... முருகா காப்பாத்தணும் என்று பீதியில் உளறிக்கிட்டு இருக்கிறாங்களாமே சோதனைச்சாவடி போலீசார்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘தமிழ்நாட்டின் வடகோடியில் ஆந்திர எல்லையில் ஐந்தாம் படை வீடு என பெயர் பெற்ற ஊருக்கு அருகே சோதனைச்சாவடி வழியாக தினமும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள், கனரக சரக்கு வாகனங்கள் ஓடிக்கிட்டு இருக்கு.. குறிப்பா, ஆந்திராவிலிருந்து கனிமவள வாகனங்கள் அதிகளவில் ஓடுதாம்.. முறையாக அனுமதி இல்லாமல் அதிக பாரத்துடன் தினமும் சென்று வர உரிய கவனிப்பு நடப்பதால், சோதனைச்சாவடி போலீசார் தாராளமா வாகனங்களை அனுமதிக்கிறார்களாம்.. அதோடு சுற்றுலா வாகனங்கள், கனரக வாகனங்கள் என்று தமிழகத்தில நுழைய 24 மணிநேரமும் வரிசை கட்டி வசூலிக்கிறாங்களாம்.. இதனால் அங்கு பணியாற்ற போலீசார் இடையே கடும் போட்டி ஏற்பட்டிருக்கு.. இதற்கிடையில், சமீபத்தில் ஏரிகள் மாவட்டத்தில் கோட்டை பெயர் கொண்ட பகுதியில் ஆந்திர எல்லையில் போக்குவரத்து சோதனைச்சாவடியில லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தி கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்ததோடு 4 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்களாம்.. இதனால் பீதி அடைந்த ஐந்தாம் படை வீடு நகரின் அருகே உள்ள சோதனைச்சாவடி போலீசார் சில நாட்கள் எந்த வாகனத்தையும் நிறுத்தாதே போ...போ... என்று விரட்டுறாங்களாம்.. வரக்கூடாது, வரக்கூடாது.... முருகா, நீதான் காப்பாத்தணும் என்று பீதியில் உறைச்சு போய் நிக்கிறாங்களாம்..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.