மோசமான வானிலை காரணமாக அந்தமான் விமானம் சென்னை திரும்பியது
சென்னை: சென்னையில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் நேற்று காலை 7.25 மணியளவில் அந்தமான் புறப்பட்டு சென்றது. விமானத்தில் 174 பயணிகள், 6 விமான ஊழியர்கள் உள்பட 180 பேர் இருந்தனர். விமானம் நேற்று காலை 9.30 மணியளவில், அந்தமான் வான்வெளியை சென்றடைந்தது. அப்போது மோசமான வானிலை நிலவியதால் அந்தமான் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரமாக வானில் வட்டமடித்து பறந்தது.
இதனால் அந்த விமானம், அந்தமான் வான்வெளியிலிருந்து, சென்னைக்கு அவசரமாக திரும்பி வந்து சென்னை விமான நிலையத்தில் பகல் 11.40 மணியளவில் பத்திரமாக தரையிறங்கியது. பயணிகள் 174 பேரும் விமானத்துக்குள்ளையே அமர வைக்கப்பட்டனர். அந்தமானில் வானிலை சீரடைந்ததும் விமானம் மீண்டும், அந்தமான் புறப்பட்டுச் செல்லும் என்று அறிவிக்கப்பட்டது. இதேபோல், அந்தமான் விமான நிலையத்தில் சென்னை வருவதற்காக 160 பயணிகள் காத்திருந்தனர்.
இது சம்பந்தமாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், மோசமான வானிலை காரணமாக, அந்தமானில் தரையிறங்க முடியாமல் விமானம் சென்னைக்கு திரும்பி வந்துவிட்டது. அங்கு வானிலை சீரடைந்ததும் விமானம் மீண்டும் அந்தமான் புறப்பட்டு செல்லும் என்றனர்.