கடந்த ஆண்டு பின்வரிசையில் இடம் செங்கோட்டை சுதந்திரதின விழாவை புறக்கணித்த ராகுல்காந்தி, கார்கே
புதுடெல்லி: டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவும் கலந்துகொள்ளவில்லை. கடந்த ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தின்போது, ஒன்றிய அமைச்சரவை அந்தஸ்து கொண்ட ராகுல் காந்திக்கு மரபு மற்றும் நெறிமுறைகளை மீறி கடைசி வரிசைக்கு முந்தைய வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்படுவது வழக்கம்.
ஆனால், ஒலிம்பிக் பதக்க வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் இருக்கை ஏற்பாடுகள் மாற்றப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் விளக்கம் அளித்தது. எனினும், ஒன்றிய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் போன்றோர் முன் வரிசையில் அமர்ந்திருந்ததை சுட்டிக்காட்டிய காங்கிரஸ், ராகுலுக்கு திட்டமிட்ட அவமதிப்பு என்று கடுமையாக விமர்சித்தது. இந்த சம்பவத்தால் ஏற்பட்ட அதிருப்தியின் காரணமாகவே இந்த ஆண்டு விழாவை ராகுல் காந்தி புறக்கணித்ததாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ராகுல் காந்தி மற்றும் கார்கேவின் அவமதிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை. இருப்பினும், இருவரும் சமூக ஊடகங்கள் வழியாக சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்து, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர். அதேசமயம், காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கார்கேவும், இந்திரா பவனில் நடந்த நிகழ்ச்சியில் ராகுல் காந்தியும் கலந்துகொண்டனர்.
* பாஜ கண்டனம்
பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனவல்லா கூறுகையில்,’மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, செங்கோட்டையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு தேசிய நிகழ்வான சுதந்திர தின நிகழ்ச்சியைப் புறக்கணித்தார். இது ஒரு தேசிய விழா, ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் அல்லது எந்தக் கட்சியின் நிகழ்வும் அல்ல. அவர்கள் தேசிய நிகழ்வைப் புறக்கணித்து நாட்டைப் புறக்கணித்தனர். ராணுவம், அரசியலமைப்பு, சுதந்திரப் போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளையும் அவமதித்தனர்’ என்றார்.