நீதிமன்றங்களில் கோடிக்கணக்கான வழக்குகள் தேக்கம் பிரச்னைகளை ஊரிலேயே பேசித் தீர்க்க வேண்டும்: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அறிவுரை
புவனேஸ்வர்: நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான வழக்குகளுக்குத் தீர்வு காண, மத்தியஸ்தம் மற்றும் கிராமப்புற அளவிலான நீதி முறைகளே சிறந்த வழி என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வலியுறுத்தியுள்ளார்.நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் சுமார் 5.23 கோடி வழக்குகள் தேங்கிக் கிடப்பதாகவும், இதனால் நீதித்துறையின் மீது பெரும் சுமை ஏற்பட்டுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சுமையைக் குறைப்பதற்காக, வழக்குகளை நீதிமன்றத்திற்கு வெளியே பேசித் தீர்க்கும் மத்தியஸ்த முறையை ஒன்றிய அரசு ஊக்குவித்து வருகிறது. இந்தச் சூழலில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் 2வது தேசிய மத்தியஸ்த மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், ‘நீதிமன்றங்களின் பணிச்சுமையைக் குறைப்பதில் சமரசம் முக்கிய கருவியாக விளங்குகிறது.
நீதிமன்றங்களில் தேங்கிக் கிடக்கும் கோடிக்கணக்கான வழக்குகளுக்குத் தீர்வு காண, மத்தியஸ்தம் மற்றும் கிராமப்புற அளவிலான நீதி முறைகளே சிறந்த வழி. சமரசம் என்பது சண்டைகளை ஆக்கப்பூர்வமான உரையாடலாக மாற்றுகிறது; பதற்றத்தை ஒத்துழைப்பாக மாற்றி, இரு தரப்பினருக்கும் இடையே நல்லிணக்கத்தை மீண்டும் ஏற்படுத்துகிறது. சமரச முறையின் உண்மையான வெற்றி, ஒரு சட்டத்தை மட்டும் சார்ந்து இருக்காமல், அடிமட்ட அளவில் மக்கள் அதனை எவ்வாறு ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அமையும். சட்டப் பணிகள் ஆணைக் குழுக்கள் இதனை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முக்கியப் பங்காற்ற வேண்டும்’ என்றார்.
இதே மாநாட்டில் பேசிய நீதிபதி சூர்ய காந்த், ‘பண்டையக் காலத்தில் ஆலமரத்தடியில் பெரியவர்கள் கூடிப் பேசிப் பிரச்னைகளுக்குத் தீர்வு கண்டது போல, நவீன சமரச முறையும் செயல்பட வேண்டும்’ என்று குறிப்பிட்டார். இந்த மாநாட்டின் முடிவில், குடும்ப, வர்த்தக மற்றும் சமூகப் பிரச்னைகளில் சமசர முறையின் பயன்பாட்டை அதிகரிக்க நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் கல்வியாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.