பள்ளி வளாகத்தில் புகுந்த குட்டி யானையை தாயுடன் சேர்த்த வனத்துறையினர்
கூடலூர்: கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புல்புள்ளி கிராமத்தில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து தாயை பிரிந்து வந்த யானை குட்டி ஒன்று பள்ளி வளாகத்திற்குள் சுற்றி திரிந்தது. இதுகுறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறையினர், சுமார் 2 மணி நேரமாக போராடி குட்டி யானையை பிடித்து தாய் யானையுடன் சேர்க்க அழைத்து சென்றனர். அடர்ந்த வனப்பகுதிக்குள் தாய் யானையை தேடிய வனத்துறையினர் அதனை கண்டு பிடித்து குட்டி யானையை அதனுடன் சேர்த்து வைத்தனர்.
ஒரு கட்டத்தில் குட்டி யானையை வனப்பகுதியில் விட்டுவிட்டு வனத்துறையினர் வாகனத்தில் ஏறி சென்ற போது அவர்களை பின்தொடர்ந்து குட்டி யானை ஓடி வந்துள்ளது. இதனை தொடர்ந்து குட்டி யானையை அடையாளம் கண்ட தாய் யானை குட்டி யானையை அழைத்துக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் குட்டி யானையை தாய் யானையுடன் சேர்த்ததால் வனத்துறையினர் மகிழ்ச்சியடைந்தனர்.