இரண்டு பான் கார்டுகள் வைத்திருந்த வழக்கில் அசம் கான், அவரது மகனுக்கு 7 ஆண்டு சிறை
ராம்பூர்: உபி முன்னாள் அமைச்சரும் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் அசம் கான்(77). இவர் மீது நில அபகரிப்பு, ஊழல், மிரட்டல்,ஆடு திருட்டு உள்பட 84 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 4 வழக்குகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதர வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில், அசம் கானின் மகனுக்கு 2 பான் கார்டுகள் பெற்ற வழக்கில் அசம் கான், அவரது மகன் அப்துல்லா அசம் ஆகியோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் அப்துல்லா அசம் இரண்டு வெவ்வேறு பிறந்த தேதிகளை சமர்ப்பித்து பான் கார்டு வாங்கியதாக பாஜ பிரமுகர் ஆகாஷ் சக்சேனா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை விசாரித்த நீதிமன்றம் அசம் கான், அப்துல்லா அசமுக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனை விதித்தது. உபி சீதாபூர் சிறையில் பல மாதங்கள் அடைக்கப்பட்டிருந்த அசம் கான் கடந்த செப்டம்பர் மாதம் சிறையில் இருந்து வெளியே வந்தார்.இப்போது சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து இருவரும் பலத்த பாதுகாப்புடன் ராம்பூர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.