சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரி மனு: கேரள அரசு, தேவசம் போர்டுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
திருவனந்தபுரம்: கேரள மாநிலம் பம்பையில் வரும் 20ம் தேதி சர்வதேச ஐயப்ப பக்தர்கள் மாநாடு நடத்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தென் மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கை, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இந்த மாநாட்டுக்கு தடை விதிக்க கோரி, ஹைந்தவீயம் என்ற அமைப்பின் சார்பில், கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. திருவிதாங்கூர் தேவசம் போர்டின் பெயரில், கேரள அரசுதான் இந்த மாநாட்டை நடத்துகிறது என்றும், மதசார்பற்ற ஒரு அரசு, ஒரு குறிப்பிட்ட மதத்திற்காக மாநாடு நடத்துவது தவறு என்றும், அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு நேற்று நீதிபதிகள் ராஜா விஜயராகவன் மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து வரும் 10ம் தேதிக்குள் (நாளை) விளக்கம் அளிக்க கேரள அரசுக்கும், திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.