ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடு உயர்வு..!!
கன்னியாகுமரி: ஆயுத பூஜையை முன்னிட்டு பூக்களின் விலை உயர்ந்துள்ளது. உலகம் முழுவதும் நாளை சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் கன்னியாகுமரியில் உள்ள தோவாளை மலர்சந்தையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. இத்தகைய சந்தையில் கேரளா மற்றும் வெளிநாடுகளுக்கு பூக்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி தேவைக்காக அதிக அளவில் பூக்கள் தோவாளை மலர்சந்தையில் வந்துள்ளது. குறிப்பாக, திண்டுக்கல், மதுரை, சத்தியமங்கலம், உதகை, பெங்களூரு போன்ற பகுதிகளிலிருந்து வழக்கத்தை விட அதிக அளவில் தோவாளை மலர்சந்தையில் பூக்கள் வந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு ரூ.300க்கு விற்கப்பட்ட அரளி இன்று ரூ.450 ஆகவும், ரூ.150க்கு விற்கப்பட்ட ரோஜா ரூ.300 ஆகவும், ரூ.100க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.600 ஆகவும், ஆரஞ்சு செவ்வந்தி ரூ.100 ஆகவும், மஞ்சள் செவ்வந்தி ரூ.120 ஆகவும், வெள்ளை செவ்வந்தி ரூ.250 ஆகவும், மரிக்கொழுந்து ரூ.150 ஆகவும், சரஸ்வதி பூஜைக்கு தேவையான தாமரை பூ ரூ.12 முதல் ரூ.15 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ஆயுதபூஜையை முன்னிட்டு வழக்கத்தைவிட 100 டன்னிற்கு மேலாக பூக்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக அப்பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இங்கு வரும் வியாபாரிகளும் மகிழ்ச்சியாக உள்ளனர். மேலும், நாளையும் பூக்கள் விலை இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.