ஆயுத பூஜையையொட்டி இதுவரை 12,000 பொரி மூட்டைகள் உற்பத்தி: 6 கிலோ மூட்டை ரூ.420க்கு விற்பனை!
புதுக்கோட்டை: ஆயுத பூஜையையொட்டி புதுக்கோட்டையில் பொரி உற்பத்தி பணிகள் இரவு பகலாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆயுத பூஜை கொண்டாடப்படும் நிலையில், ஆயுத பூஜைக்கு முக்கிய பொருளான பொரி தயாரிப்பு, தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மும்முரமாக நடைபெறுகிறது. புதுக்கோட்டை தெற்கு ராஜவீதி பகுதியில் தயாரிப்பு கூட்டங்களில் இயந்திரம் மூலம் உற்பத்தி செய்யும் பொரி உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு ஊர்களுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
இங்கு நடப்பாண்டு மழை பெய்தாலும் பகலில் வெயில் சுட்டெரிப்பதால் பொரி தயாரிப்பு பணி பாதிப்பின்றி மும்முரமாக நடைபெறுவதாக உற்பத்தியாளர்கள் கூறுகின்றன. மூலப்பொருட்களின் விலை ஏற்றம், தொழிலாளர் கூலி உயர்வு எதிரொலியாக 6 கிலோ எடை கொண்ட பொரி மூட்டை ரூ.30 வரை அதிகரித்து, ரூ.420க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு 9,000 பொரி மூட்டைகள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் வியாபாரம் அதிகரிக்கும் என்று உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர். இதனால் இதுவரை 12,000 பொரி மூட்டைகள் வரை உற்பத்தி செய்து வைத்துள்ளதாக உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.