ஆயுத பூஜை விடுமுறை.. மதுரை, செங்கோட்டை, திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!!
சென்னை: ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறையை முன்னிட்டு, தெற்கு ரயில்வே மூன்று சிறப்பு ரயில்களை அறிவித்துள்ளது. காலாண்டு விடுமுறை மற்றும் ஆயூத பூஜை, விஜயதசமி விடுமுறையையொட்டி பொதுமக்கள் வெளியூர்களுக்கு பயணம் செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் பெரும்பாலான ரயில்களில் முன்பதிவு முடிவடைந்துள்ளது. இதன் காரணமாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா? என பொதுமக்கள் காத்திருந்தனர். அந்த வகையில் தெற்கு ரயில்வே பயணிகள் நெரிசலை கருத்தில் கொண்டு மூன்று சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது; ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு இடையே நாளை (30ம் தேதி) சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. நாளை இரவு 10.15 மணிக்கு சென்னை எழும்பூரில் இருந்து புறப்படும் சிறப்பு ரயில் (வண்டி எண் 06075), மறுநாள் மதியம் 2.05 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த சிறப்பு ரயில் (06076) திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் இருந்து அக்டோபர் 5ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது.
19 பெட்டிகளை கொண்ட இந்த சிறப்பு ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், பூதனூர், பாலக்காடு, திருச்சூர், அலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம், செங்கனாசேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, கயன்குளம், கொல்லம், வர்கலா ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இதேபோல், தாம்பரத்தில் இருந்து செங்கோட்டைக்கு நாளை (30ம் தேதி) முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தாம்பரத்தில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள் அதிகாலை 3 மணிக்கு செங்கோட்டை ரயில் நிலையத்தை சென்றடைகிறது.
முன்பதிவில்லாத இந்த சிறப்பு ரயில் 15 பெட்டிகளை கொண்டிருக்கும். மேலும், சென்னை எழும்பூரில் இருந்து மதுரைக்கு மெமு எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. சென்னை எழும்பூரில் இருந்து நாளை (30ம் தேதி) இரவு 11.45 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு மெமு ரயில் மறுநாள் காலை 10.15 மணிக்கு மதுரையை சென்றடையும். முன்பதிவில்லாத பெட்டிகளை கொண்ட இந்த மெமு ரயில் மொத்தம் 12 பெட்டிகளை கொண்டிருக்கும். மேற்கண்ட ரயில்களில் சென்னை எழும்பூர் - திருவனந்தபுரம் வடக்கு ரயில்களுக்கான முன்பதிவு உடனடியாக தொடங்குகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.