ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகம் அருகே பைக் ரேஸ்: வாலிபர்களை சாலையில் மடக்கி பிடித்த போலீசார்
சென்னை: ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னை டிஜிபி அலுவலகம் அருகே பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களை போலீசார் மடக்கி பிடித்தனர். ஆயுத பூஜையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வாகனங்கள் சுத்தம் செய்து வீடுகளில் வழிபாடு செய்தனர். அதன்படி நேற்று வாகனங்களுக்கு பூஜை செய்துவிட்டு சில வாலிபர்கள் மெரினா காமராஜர் சாலையில் பைக் ரேசில் ஈடுபடுவதாக பொதுமக்கள் சார்பில் புகார் வந்தது. அதன்படி மெரினா போலீசார் நேற்று டிஜிபி அலுவலகம் முன்பு சாதாரண உடையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது வாலிபர்கள் சிலர் தங்களது பைக்குகளில் சாலையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் வீலிங் செய்து சாகசத்தில் ஈடுபட்டனர். இதை கவனித்த போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். அப்போது போலீசாரை கண்டதும் வாலிபர்கள் தங்களது பைக்கில் தப்பி ஓடினர். ஆனால் போலீசார் சாலையின் இடையே வழிமறித்து பைக் ரேசில் ஈடுபட்ட வாலிபர்களில் ஒருவரை மடக்கி பிடித்தனர். அப்போது அவர்கள் அதே பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.
அதைதொடர்ந்து, மெரினா போலீசார் அதிவேகமாக வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து பைக்கை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய வாலிபர்கள் சிசிடிவி காட்சிகளை வைத்து கைது செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.