அயோத்தியில் ரூ.650 கோடியில் கோயில்களின் அருங்காட்சியகம்: உ.பி. அமைச்சரவை அனுமதி
12:40 AM Jun 26, 2024 IST
Share
லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம், அயோத்தியில் கோயில்களின் அருங்காட்சியகம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. நாட்டின் புகழ்பெற்ற கோயில்களின் வரலாறு மற்றும் கட்டிடக்கலையை காட்சிப்படுத்துவது இதன் நோக்கமாகும். கோயில்கள் அருங்காட்சியகம் அமைக்க டாடா சன்ஸ் குழுமத்திடம் இருந்து முன்மொழிவு பெறப்பட்டு இருந்தது. இந்நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ரூ.650கோடியில் கோயில் அருங்காட்சியகம் அமைப்பதற்கான டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்மொழிவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த சுற்றுலா துறை அமைச்சர் ஜெய்விர் சிங், ‘‘டாடா சன்ஸ் நிறுவனம் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ரூ.650கோடி செலவில் அருங்காட்சியகத்தை கட்டுவதற்கு ஒன்றிய அரசின் திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சர்வதேச அளவிலான அருங்காட்சியத்துக்கான நிலத்தை 90 ஆண்டு குத்தகைக்கு ரூ.1 முன்பணத்திற்கு சுற்றுலா துறை வழங்கும்” என்றார்.