திரிணாமுல் சஸ்பெண்ட் எம்எல்ஏ தலைமையில் அயோத்தி பாபர் மசூதி வடிவத்தில் புதிய மசூதி: அடிக்கல் நாட்டு விழாவால் மேற்குவங்கத்தில் பதற்றம்
பெல்டாங்கா: மேற்கு வங்கத்தில் பாபர் மசூதி வடிவத்திலான புதிய மசூதிக்கு பலத்த பாதுகாப்புடன் இன்று அடிக்கல் நாட்டப்பட்டு, பல்லாயிரம் பேருக்கு பிரியாணி விருந்து அளிக்கப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் கடந்த 1992ம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்ட சம்பவத்தின் 33வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் சூழலில், இடிக்கப்பட்ட அதே மசூதியின் வடிவத்தை போன்று மேற்கு வங்கத்தில் புதிய மசூதி கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெறுகிறது.
முர்ஷிதாபாத் மாவட்டம் பெல்டாங்காவில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து அண்மையில் இடைநீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ஹுமாயூன் கபீர் தலைமையில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அவர், மதவாத அரசியலில் ஈடுபடுவதாக கூறி கடந்த 4ம் தேதி அவரை கட்சியில் இருந்து நீக்கிய திரிணாமுல் காங்கிரஸ் தலைமை, இந்த நிகழ்விற்கும் கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என விலகிக்கொண்டது. இதற்கிடையில், இந்த விழாவிற்கு தடை விதிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டாலும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முழுப் பொறுப்பும் மாநில அரசுக்கு உண்டு என அறிவுறுத்தியிருந்தது. புதிய கட்சி தொடங்கத் திட்டமிட்டுள்ள ஹுமாயூன் கபீர், இந்த நிகழ்வை ‘இது இப்பகுதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக சவுதி அரேபியாவிலிருந்து இரண்டு மத குருமார்கள் கொல்கத்தா விமான நிலையத்திலிருந்து சிறப்பு வாகனங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். சுமார் 3 லட்சம் பேர் வரை கூடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விழாவிற்கு வரும் 40 ஆயிரம் விருந்தினர்கள் மற்றும் 20 ஆயிரம் உள்ளூர் பொதுமக்களுக்கு வழங்குவதற்காக 7 சமையல் ஒப்பந்த நிறுவனங்கள் மூலம் ‘ஷாஹி பிரியாணி’ தயார் செய்யப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் கூடுவதால் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்க 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் காவல்துறையினரும், மத்திய ஆயுதப்படையினரும் குவிக்கப்பட்டு அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டிருந்தது.