ஸ்ரீ ரேவதி இன்டேன் கேஸ் ஏஜென்சி சார்பில் சமையல் எரிவாயு குறித்த விழிப்புணர்வு முகாம்
வேளச்சேரிமேடவாக்கம் ஸ்ரீ ரேவதி இன்டேன் கேஸ் ஏஜென்சிஸ் சார்பில், எல்பிஜி சமையல் எரிவாயுவை சிக்கனமாகவும், பாதுகாப்பாகவும் உபயோகிப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் சித்தாலப்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ஏஜென்சி உரிமையாளர் எம்.ராகவன் தலைமையில் நேற்று நடந்தது. அப்போது, மாணவர்களுக்கு எரிவாயு சிக்கனம் மற்றும் எரிவாயு பாதுகாப்பு குறித்து கூறுகையில், ”சமையலறைகள் காற்றோட்டமாகவும், தனியாகவும் இருப்பது பாது காப்பானது. கேஸ் லீக் ஆகி வாசனை வந்தால் வீட்டில் எரிந்துகொண்டிருக்கும் எண்ணெய் விளக்குகள், மெழுகு வத்திகளை உடனடியாக அனைத்துவிடவேண்டும். ஆனால். மின்விளக்கு, மின்விசிறி சுவிட்ச்களை ஆன், ஆப் செய்யக் கூடாது. உடனடியாக. ஜன்னலை திறந்துவிட்டு சமையலறையை காற்றோட்டமாக வைக்கவேண்டும். ரெகுலேட்டரை ஆப் செய்து கழட்டி விடவேண்டும்.
பின்னர், சிலிண்டரில் உள்ள பிளாஸ்டிக் மூடியால் சிலிண்டரை மூடிவிடவேண்டும். வீடுகளில் மிக எளிதாக பயன்படுத்த நவீன பிளாஸ்டிக்காலான 10 கிலோ கேஸ் சிலிண்டர் (காம்போசிட் எல்பிஜி சிலிண்டர்) வாங்கி உபயோகிக்கலாம். இவை எடை குறைவாக இருப்பதால் பெண்கள் மிக எளிதாக தூக்கி உபயோகிக்க முடியும். அதே சமயத்தில் தீபற்றினாலும் வெடிக்காது. ஆபத்து இல்லாதது. கேஸ் மெக்கானிக்கை அழைக்க 24 மணிநேரமும் செயல்படும் தொலைபேசி எண் 1906ல் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் போன்ற ஆலோசனை வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு அமர் சித்ரா கதா புக்லெட் வழங்கப்பட்டது. கூட்டத்தில், 500க்கும் மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், கேஸ் ஏஜென்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்துகொண்டனர்.