இப்படியும் ஒரு விழிப்புணர்வு மரங்களில் ஆணியை அகற்றி மஞ்சள் பத்து போடும் எஸ்ஐ
ராமநாதபுரம் : மரங்களில் விளம்பர பலகைகளை மாட்டி வைப்பதற்காக அறையப்பட்ட ஆணிகளை அகற்றி சிறப்பு எஸ்ஐ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். ராமநாதபுரம் பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு எஸ்ஐ சுபாஷ் சீனிவாசன்.
இயற்கை ஆர்வலரான இவர், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் மரங்களில் மாட்டப்பட்டுள்ள விளம்பர பலகைகள், ஆணிகளை ஓய்வு நேரங்களில் அகற்றி வருகிறார். மேலும் ஆணி பிடுங்கிய இடத்தில் மஞ்சள் வைத்து மூடி முதலுதவியும் செய்து வருகிறார்.
இதுகுறித்து சிறப்பு எஸ்ஐ சுபாஷ் சீனிவாசன் கூறும்போது, ‘‘ராமநாதபுரம் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கடந்த 2023ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
அதன்படி மாவட்ட நிர்வாகம் சார்பில் மரத்தின் அவசியம் குறித்து பல்வேறு வழிகளில் விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். மரங்களால் மழை பெய்யும் அளவு அதிகரிக்கும். குடிநீர் தட்டுப்பாடு குறையும். விவசாயம் செழிக்கும், புவி வெப்பமயமாக்கல் தடுக்கப்படும்.
இவ்வளவு நன்மை செய்யும் மரத்தில் விளம்பர பலகையை மாட்டி வைப்பதற்காக ஆணி அடித்து சேதப்படுத்தி வருவது வேதனையாக உள்ளது. இது சட்டத்திற்கு புறம்பான செயல் ஆகும்.
எனவே மரத்தில் ஆணி அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதை உரிய நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும். அனைத்து தரப்பினரும் மரம் நடுவது மட்டுமின்றி, இருக்கின்ற மரத்தை பாதுகாக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன்’’ என்றார்.