ஆவணி கடைசி ஞாயிறு: நாகராஜா கோயிலில் கூட்டம் அலைமோதல்
நாகர்கோவில்: ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று நாகர்கோவில் நாகராஜா கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நாகர்கோவிலில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நாகராஜா கோயிலில் ஆவணி ஞாயிறு வழிபாடு மிகவும் விசேஷமாக கருதப்படுகிறது. வழக்கத்தை விட ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகளவில் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்து நாகர் சிலைகளுக்கு பால் மற்றும் மஞ்சள் ஊற்றி வழிபாடு நடத்துவார்கள். அதன்படி கடந்த மாதம் 17ம்தேதி ஆவணி முதல் ஞாயிறு ஆகும். கடந்த 24, 31, 7ம் தேதிகளிலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமை ஆகும். இந்த நாட்களில் அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. கோயிலில் அன்னதானமும் நடைபெற்றது. இன்று (14ம்தேதி) ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமை ஆகும்.
இன்றும் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் கூட்டம் இருந்தது. அதிகாலை 3.30க்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். நாகராஜா கோயில் வளாகத்தில் உள்ள நாகர் சிலைகளுக்கு மஞ்சள், பால் ஊற்றியும் பக்தர்கள் வழிபாடு செய்தனர். கோயில் தெற்கு பிரகார வாயிலை தாண்டியும் நாகராஜா கோயில் குறுக்கு தெருவில் நீண்ட வரிசையில் பக்தர்கள் நின்றனர். சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் காத்திருந்து, பால், மஞ்சள் ஊற்றி வழிபாடு செய்தனர். வழக்கமாக கோயிலில் பகல் 12.30க்கு நடை சாத்தப்படும். இன்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால், பகல் 1.30 மணி வரை நடை திறந்து இருந்தது.