தன்னாட்சி அங்கீகார விதிகளுக்குட்பட்டு பல்கலைகள் செயல்பட யுஜிசி அறிவுறுத்தல்
பொதுவாக, கல்லூரிகளுக்கு தன்னாட்சி அங்கீகாரம் வேண்டி விண்ணப்பிக்கும்போது அதற்கான கருத்துருக்களை பல்கலைகளிடம் இருந்து யுஜிசி கேட்டு பெறுவது வழக்கம். ஆனால், பல்வேறு பல்கலைகள் தன்னாட்சி அங்கீகாரம் வழங்குவதற்கான இணைப்பு கல்லூரிகளின் விண்ணப்பங்களை செயலாக்குவதில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. இதுதொடர்பாக யுஜிசி தளத்தில் எந்த பதிலும் அளிக்கப்படுவதில்லை.
அதேபோல், யுஜிசியால் தன்னாட்சி அங்கீகாரம் வழங்கப்பட்ட பின்னும் அதுகுறித்து தகவல் சம்பந்தப்பட்ட கல்லூரிகளுக்கு தாமதமாக செல்வதாகவும் புகார்கள் வந்துள்ளன. இதனால் பாடத்திட்டங்களை வடிவமைத்தல், புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துதல் மற்றும் மாணவர்களின் செயல்திறனை மதிப்பிடுவதற்கான முறைகளை உருவாக்குதல் போன்ற பல்வேறு செயல்பாடுகளை மேற்கொள்வதில் தன்னாட்சி கல்லூரிகளுக்கு இடர்பாடுகள் உள்ளன. எனவே, தன்னாட்சி அங்கீகாரம் தொடர்பான யுஜிசி விதிகளுக்குட்பட்டு பல்கலைக்கழகங்கள் செயல்பட வேண்டும்.